அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 6 June 2019

உதவிக்கரம்





அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : 

وَتَعَاوَنُوا عَلَى البِرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُوا عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ العِقَابِ

நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.

முஸ்லிம்களே! அல்லாஹ் தன அடியார்களில் நன்மைகளின் திறவுகோலை வழங்கியிருக்கிறான். அவைகளை நன்மையான காரியங்கள் செய்வதிலும் இறைவனுக்கு வழிபட்டு அவனை நெருங்கும் வணக்கங்களை செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.

வல்ல அல்லாஹ் தன திருமறையில் கூறுகிறான்

.يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ23:61. 

இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில் முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.


  அல்லாஹ் மனிதனை படைத்து பூமியில் தன் பிரதிநிதிகளாக அமர்த்தி அவனுக்கு நன்மைகள் செய்யும்படியும், அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்யும்படியும் ஏவி இருக்கிறான். இந்த இரண்டு காரியங்களை அல்லாஹ்வை நெருங்கும் வழியாகவும் இரு உலக வெற்றிக்கு காரணமாகவும் அமைத்து வைத்திருக்கிறான்.

வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ22:77. 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.

       மார்க்க வல்லுனர்கள் இந்த வசனத்துக்கு விளக்கம் சொல்லும் போது “ இந்த வசனம் எல்லா வகையான நன்மையான காரியங்களை பற்றி சொல்லுகிறது. மனிதர்கள் மீது இறக்கம் காட்டுவது, ஏழைகளின் மீது அன்பு செலுத்துவது அவர்களுக்கு உதவுவது, தர்மம் செய்வது, அன்போடு பேசுவது மேலும் இது போன்றவைகள் ”

எனவே நாம் எல்லா வகையான நன்மையான காரியங்களை செய்ய முற்படவேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது என்பது இறைவனை நெருங்கும் ஒரு வழி. மக்களுக்கு நன்மை செய்வது என்பதன் பொருள் “ அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களின் சிரமங்களை நீக்க முயற்சிப்பது, அவர்களின் தேவைக்காக குரல் கொடுப்பது அல்லது அவர்களின் சிரமம் நீங்க ஏதேனும் ஒரு வழியில் நாம் காரணமாக இருப்பது.”

வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

.إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لاَ نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلاَ شُكُوراً76:9. 

“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

அதாவது இந்த வசனத்தின் கருத்து: உங்களுக்கு உணவளிப்பத்தின் நோக்கம் அல்லாஹ் எங்களை பொருந்திக்கொள்ள வேண்டும் அவன் எங்களுக்கு நல்ல கூலியை வழங்க வேண்டும். இந்த செயலுக்காக எங்களுக்கு வேறு யாரிடமும் கூலியும் எந்த பலனும் வேண்டாம்.
அந்த நல்ல அடியார்களின் உள்ளத்தை அறிந்த இறைவன் அவர்களை தன திருமறையில் புகழ்கிறான். இந்த எண்ணத்துடன் அடியார்களுக்கு நன்மைகளை செய்பவர்களும் இந்த புகழுக்கு தகுது பெறுவார்கள்.


அடியார்களே! மக்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு மனித நேயம். இந்த குணம் எல்லா மனிதர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களில் சிறந்தவர்கள் மக்களுக்கு அதிகம் நன்மை செய்பவர்கள. மேலும் இது நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் குணம்.

நம்முடைய நபியாகவும் முன்னோடியாகவும் வாழ்ந்த முஹம்மது நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வாழ்கையை பாருங்கள்.

ஹிரா குகையில் ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் வந்து வஹி செய்தியை தந்த பிறகு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவி ஹதீஜா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களிடம் வருகிறார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் புதிய மனிதரை கண்ட பயத்தால் “ எனக்கு பயமாக உள்ளது ” என்று சொல்லி தனக்கு ஹிரா குகையில் நடந்ததை சொல்கிறார்கள். அதை  கேட்ட கதீஜா ரலியல்லாஹ் அன்ஹா அவர்கள் “ நிச்சயம் ஒரு போதும் அல்லாஹ் உங்களை அவ்வாறு இழிவுப்படுத்தமாட்டான். ஏனெனில் நீங்கள் உறவுகளுடன் சேர்ந்து வாழ்கிறீர்கள், ஒன்றும் இல்லாதவர்களுக்கு நீங்கள் பணத்தால் உதவுகிறீர்கள், ஏழைகள், அனாதைகளுக்காக நீங்கள் செல்வு செய்கிறீர்கள், உண்மைக்காக உழைக்கிறீர்கள்”.      நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நுபுவ்வத்துக்கு முன்பும் மக்களின் நலன் பனியில்தான் தான் வாழ்கையை அமைத்தார்கள்.

 நபி மூஸா அலைஹி வ ஸலாம் அவர்களின் வாழ்கை குறிப்பை பற்றி இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்

.وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لاَ نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ* فَسَقَى لَهُمَا

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.


நபி மூஸா அலைஹி வ ஸல்லம் அவர்கள் மத்யன் நாட்டிற்கு வந்தபோது ஒரு கினற்றின் அருகிள் ஷூஐபு அலைஹி வ ஸலாம் அவர்களின் இரண்டு மகள் தண்ணீர் எடுக்க முடியாமல் இருந்தார்கள். அதை பார்த்த நபி மூஸா அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களுக்கு உதவி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார்கள்.

வரலாற்று நிகழ்வுகளை மிக சுருக்கமாக சொல்லும் அல்லாஹ் இந்த நிகழ்வுகளையும் சுட்டிகாட்டுகிறான் எனில் அடுத்தவருக்கு உதவி செய்யும் பண்பு நபிமார்களின் என்பதை விளக்குகிறான்.

துல்கர்னைன் அலைஹி ஸலாம் அவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் உதாரணமாக எடுத்து சொல்கிறான்.

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்களின் குழப்பத்தை விட்டும் மக்களை காப்பாற்றுவதற்காக இரு மலைகளுக்கு மத்தியில் யஃஜூஜ், மஃஜூஜ்  கூட்டத்தார்களை துல்கர்னைன் அலைஹி ஸலாம் அவர்கள் அடைத்தார்கள். அப்போது மக்கள் துல்கர்னைன் அலைஹி ஸலாம் அவர்களிடம் சொன்னதை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்

.قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجاً عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا 

அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள்.அதற்கு துல்கர்னைன் அலைஹி ஸலாம் அவர்கள் மக்களிடம் சொன்னார்கள்

مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكمْ وَبَيْنَهُمْ رَدْماً

அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்"


மக்களுக்கு செய்யும் உதவிகளே மகத்தான நன்மையான காரியங்கள் என்பதே மேற்கண்ட வசனங்களின் கருத்தாகும்.


இந்த குணங்கள் சஹாபாகளிடமும் அதிகம் காணப்பட்டது. சஹாபாக்கள் அடுத்தவர்களுக்கு நன்மை நாடுவதிலும் அதற்காக தன பங்களிப்பை வழங்குவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்தார்கள்.

அவர்களில் குறிப்பாக அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவுதலிலும் மக்களுக்கு நன்மை தரும் செயற்களில் எடுபதுவதிலும் அதிகம் தீவிரம் காட்டினார்கள்.

அபு ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சஹாபாகளிடம் “ உங்களில் யார் இன்று நோன்பாளியாக இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “ நான் ” என்று பதில் சொன்னார்கள். பிறகு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ உங்களில் யார் இன்று ஒரு ஜனாஜாவை பின்தொடர்ந்து சென்றது ( அடக்கம் செய்வதற்காக )” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் என்று பதில் சொன்னார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீண்டும் கேட்டார்கள் “ உங்களில் யார் இன்று ஏழைக்கு உணவு வழங்கியது ”. அதற்கும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “ நான்” என பதில் அளித்தார்கள். அடுத்து நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ உங்களில் யார் இன்று நோயாளியை நலம் விசாரித்தது ” என்று கேட்டார்கள். அதற்கும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்” என்று பதில் சொன்னார்கள்.

இதை கேட்ட நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ இந்த     (மேல்சொல்லப்பட்ட நான்கு ) விஷயங்கள் ஒரு மனிதனிடம் ஒன்றாக காணப்பட்டால் அவன் சொர்க்கம் புகுவான்.  ”


முஸ்லிம்களே! நம்முடைய நேரிய மார்க்கம் நமக்கு நன்மைகளின் பல வாசல்களை திறந்து விட்டிருக்கிறது. அவைகளை செய்யும் பல்வேறுப்பட்ட முறைகளையும் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது.


ஒரு முறை நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமானதாக இருக்கிறது”. அதை கேட்ட சஹாபாக்கள் கேட்டார்கள் “ யாரசூலல்லாஹ்!. தர்மம் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் ?”. அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ தான் உழைக்கும் பணத்தில் தானும் பயன் பெற்று அடுத்தவருக்கும் அதை தானம் செய்யவேண்டும் ” என்று கூறினார்கள்.


இதை கேட்ட சஹாபாக்கள் சொன்னார்கள் “ யாரசூலல்லாஹ்! ஒருவனுக்கு அதற்கும் சக்தி இல்லாமல் போனால் அவன் என்ன செய்ய வேண்டும்?”. நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்” அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனால் அவன் தேவை உடையவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும்”.  மீண்டும் சஹாபாக்கள் கேட்கிறார்கள் “ யாரசூலல்லாஹ் ஒருவனுக்கு இதையும் செய்ய முடியாமல் போனால் அவன் நிலை என்ன?” அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ ஒருவன் நன்மையான காரியங்கள் செய்து அவன் அடுத்தவர்களுக்கு தீங்கு தராமல் தன்னை காத்து கொள்ளட்டும். அதுவே அவனுக்கு தர்மமாகும்.”

இது போன்ற உதவிகளை நமக்கு தெரிந்தவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்பதல்ல .... நாம் யாரென்றே அறியாதவருக்கும் அவருக்கு தேவைப்படும் பொழுது செய்வது மிகவும் மகத்தானதாகும். அதே போன்று.... நாம் நம் பொருளை கொண்டு செய்வது தான் உதவி என்பதல்ல.... அவர்களுக்கு எந்த வகையில் தேவைப்படுகிறதோ அதனை உரிய நேரத்தில் செய்வதே மிகவும் சிறந்த உதவி யாகும். 

இந்த கருத்தை உணர்த்தும் நல்லதொரு சம்பவம் விகடன் இதழில் வெளியாகி இருந்தது : 


உதவி என்பது : 


அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வந்தார். 

``சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’ 

கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். வலி நிவாரணி மாத்திரைகள், மயக்க மருந்துகள் அதிக அளவில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், கண்களையே மெதுவாகத்தான் அவரால் திறக்க முடிந்தது. நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை `யூத் மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லியிருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்தாள்.  

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார். 

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்... ``தம்பி... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’ 

``வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது. 

முதியவர்

விடிந்தது. கிழவர் இறந்துபோயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான். 

``ரொம்ப சாரி தம்பி... உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...’’ என்றார் அந்த நர்ஸ். 

``நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’ 

``அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லியிருக்கலாமே... ஏன் சொல்லலை?’’ 

``நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது. அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சுது. அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.’’  நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான். 


எனவே இஸ்லாம் நன்மையான காரியங்களை மட்டுமல்ல அதை செய்யும் பல்வேறுப்பட்ட வழிகளையும் சொல்லிக்காடுகிறது.அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்


.وَمَا أَمْوَالُكُمْ وَلاَ أَوْلادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَى إِلاَّ مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُوْلَئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الغُرُفَاتِ آمِنُونَ


(நீங்கள் எண்ணுகிறவாறு) உங்களுடைய பொருள்களும் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவைகளல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) இத்தகையவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. அன்றி, அவர்கள் (சுவனபதியிலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.


எனவே வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அதிகமான நன்மைகளை செய்யும் நல்லடியார்களாகவும் குறிப்பாக மக்களுக்கு அதிகம் நன்மை செய்யும் சிறப்பு மிகுந்த கூடத்தில் உள்ளவர்களாக இருக்க அருள் புரிய வேண்டும். 



No comments: