அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 23 July 2015

மக்தப் மதரசா


ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் பள்ளி செல்லும் குழந்தைகளில் வெறும் 3% குழந்தைகள் மட்டுமே மதரஸாவிற்கு செல்கிறார்கள் என இஸ்லாமியர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமை தாழ்ந்து போனதின் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசால் கடந்த 2000 ஆண்டு அமைக்கப்பட்ட சச்சார் குழுவால் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவு இது.

இதற்கான காரணங்கள் என்ன?


  • பெற்றோர்களின் விருப்பமின்மையா?
  • மாணவர்களின் ஆர்வமின்மின்மையா?
  • இன்றைய சமூகத்தின் சூழ்நிலையா?
  • பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மீது அதிகரித்து விட்ட மோகமா?
வேறு என்ன காரணம்?

மக்தப் என்கிற அடித்தளத்தின் மீது வளர்ந்தவர்கள் நாம் அனைவரும். அன்றிலிருந்து இன்றுவரை நம் இஸ்லாமியர்களிடம் மார்க்கத்தின் தன்னிகரற்ற மிகப் பெரிய மீடியாவாக, மார்க்கத்தோடு ஒரு இஸ்லாமியனை இணைக்கும் மிகப் பெரிய பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிற மக்தப் மத்ரசாக்களின் இன்றைய நிலை, சமீபகாலமாக நம் தமிழக உலமாக்களை அதிக கவலைக்கும்  சிந்தனைக்கும் ஆட்படுத்தியிருக்கின்றன.

தமிழகத்தின்  ஒவ்வொரு பள்ளிதோறும் மக்தபுகள் என்ற நிலையிருக்கின்ற போதிலும் கூட எங்குப் பார்த்தாலும் மாணவர்கள் குறைவு என்கின்ற பேச்சை உலமாக்கள் மற்றும் மார்க்கத்தின் ஆர்வலர்களிடம் கேட்க முடிகிறது.

மக்தப் மதரசாக்களின் வரலாறு. மக்தப் மதரசாக்களின் அவசியம். மக்தப் மதரசாக்களின் வீழ்ச்சியினால்  நாம் அடைந்த பாதிப்புகள். அதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றி இக்கட்டுரை அலசுகிறது.

மதரசாக்கள் என்றால் பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களின் அரபு மூலமே மதரசா. ஆனால் மார்க்கம் சார்ந்த கல்வியை கற்றுக் கொடுக்கும் இடமாக மட்டுமே மதரசாக்களை பார்க்கிறோம். அதுவே நம் பிள்ளைகளின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்துவிட்டது. மதரசாவையும் பள்ளிக்கூடத்தையும் வெவ்வேறாக பார்க்கிறார்கள். வரலாறுகளில் பள்ளிக்கூடத்தின் ஆரம்பத்தை தேடினால் சில வருடங்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ளலாம். மதரசாக்களின் ஆரம்பத்தை பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதைய மண்ணடியில் அன்றைய காலத்தில் குடியேறிய அரபியர்களை அனைவரும்  மூர்கள் என்று அழைத்தனர். அவர்கள் வாழ்ந்த அந்த தெருவேமூர் தெருஎன்று இன்றும் அழைக்கப்படுகிறது. அந்த அரபியர்கள் மதரசாக்களை ஆரம்பித்து சிறார்களுக்கு கல்வியை கற்றுத் தந்தனர். எனவே அந்தப் பகுதியில் அதிகமான மதரசாக்கள் ஏற்பட்டது. அந்த மதரசாக்களை சுற்றியிருந்த பகுதியே மதரசாபட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதுவேமதராஸ்என்பதற்கு பெயர் காரணமாக அமைந்தது.

மதரசாக்களின் பரிணாம வளர்ச்சியே, இன்றைய பள்ளிக்கூடங்கள். எப்போது பள்ளிக்கூடங்கள் தனியாக ஆரம்பிக்கப்பட்டதோ, அப்போதே மதரசாக்களின் தரம் குறைந்துவிட்டது. தொழுகையின் போது பலர் நாவுகளில்குல் ஹுவல்லாஹு அஹத்சூராவும்இன்னா அஃதைனாசூராவும் வெளிப்படுகிறதென்றால், அது மக்தப் மதரசாக்கள் ஏற்படுத்திய மாற்றமே.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுஎன்ற பழமொழிக்கேற்ப சிறுவயதிலேயே மார்க்கம் சார்ந்த கல்வியை கற்றுக் கொடுக்கும் மதரசாவின் பலகீனங்களை சரிசெய்து பலமாக்கும் பட்சத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மிகச் சரியாக வடிவமைக்கலாம்.

அழகான வாழ்க்கை தத்துவங்களையும் நற்குணங்களையும் இஸ்லாம் மட்டுமே முழுமையாக தந்திருக்கிறது. அதை சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், பிள்ளைகளை ஏழு வயதிலேயே தொழுகைக்கு அனுப்ப சொல்லியிருகிறார்கள். அப்படியானால் தொழும் முறையை ஏழு வயதிற்கு முன்பாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும் தெரிய வருகிறது.

நமது பிள்ளைகளை ஏழு வயதிற்கு பிறகு தொழுகைக்கு அனுப்புவதை விட ஏழு வயதிற்கு முன்பே மக்தப் மதரசாவிற்கு அனுப்புவது சாலச் சிறந்தது.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதியமின்ஹாஜுல் ஆபிதீன்என்கிற அரபு புத்தகத்தில்கல்வி சிறந்ததா? வணக்கம் சிறந்ததா?” என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதிலளித்திருப்பார்கள். அஃதாவது, வணக்கத்தை விட கல்வியே சிறந்தது. காரணம் முறையாக கற்ற கல்வியைக் கொண்டே சரியாக வணங்க முடியும். கல்வியில்லாத வணக்கம், முறையான வணக்கமாக இருக்காது. ஒளு செய்யும் முறை மற்றும் தொழுகும் முறை போன்ற கல்வியறிவே வணக்கத்தை முழுமையடையச் செய்யும் எனவே, வணக்கத்தை விட கல்வியே சிறந்ததுஎன்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பதிலளிதார்கள்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:-

ஒருவன் உலகில் யார் யாரையோ முன்னுதாரணமாக எடுப்பதற்கு முன்பாக, தெரிந்தோ தெரியாமலோ தன் பெற்றோர்களையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கின்றான். பெற்றோர்கள் ஒரு விஷயத்தை மிகக் கவனமாக புரிந்துகொள்ள வேண்டும்; உங்கள் பிள்ளை விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நான்கு வயதிலேயே மக்தப் மதரசாக்களுக்கு அனுப்பிவிட வேண்டும். காரணம், பன்னிரண்டு வயதை தாண்டும் பிள்ளைகள் காலச் சூழ்நிலைக்கேற்ப மக்தப் மதரசாக்களைப் புறக்கணிக்கிறார்கள். மதரசாக்களின் அமைப்புகள் பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மதரசாக்களுக்கு செல்வதை விரும்புவதில்லை.

எனவே, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்க விரும்பினால், சிறுவயதிலேயே மக்தப் மதரசாக்களில் சேர்த்து விடுங்கள். பன்னிரண்டு வயதை தாண்டிவிட்டால் அதோடு மரணிக்கும் வரை மார்க்க விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கப் போகும் ஒட்டுமொத்த மார்க்க அறிவு என்பது மக்தப் மதரசாக்களில் என்ன கற்றுக் கொள்கிறார்களோ அதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு மார்க்கத்தைப் பற்றி கற்றுக் கொடுத்ததைப் பற்றி கேள்வி கேட்கப்படுவார்கள். என்கிறது நபிமொழி

பிள்ளைகளை மதரசாக்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பும்போது, அவசர அவசரமாக பிள்ளைகளை குளிப்பாட்டி, சீருடை அணிவித்து ஆயத்தமாக்குகிறார்கள். ஆசிரியர் கண்டிப்பதாக பிள்ளைகளை பயமுறுத்தி, பள்ளிக்கூடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மதரசாக்களுக்கு கொடுப்பது கிடையாது. தன் மார்க்கத்தையும் மார்க்கக் கல்வியையும் தரம் தாழ்ந்ததாக பார்க்கிறவர்களின் ஈமானை பரிசோதிக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையில் குறைபாடு உள்ளதாகவே பார்க்கத் தோன்றுகிறது. மதரசாக்களுக்கு செல்லும் பிள்ளைகள், அவர்கள் தூக்கத்திலிருந்து எழும் போது பெற்றோர்கள் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். போனால் போகட்டும் என்கிற இந்த பொடுபோக்கு அவர்களின் மறுமை வாழ்க்கையையே பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

தான் இறந்த பிறகும் தனக்காக வரும் நன்மைகளில் தன் பிள்ளைகளின் பிரார்த்தனையும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்தப் மதரசாக்களில்

>> குர்ஆனோடு தொடர்பு ஏற்படுத்துதல்
>> வணக்க வழிபாடுகளுக்கான பயிற்சியளித்தல்
>> அடிப்படை மார்க்க சட்டங்களை கற்றுத்தருதல்
>> வாழ்க்கைத் தத்துவங்களையும் நற்குணங்களையும் கற்றுத்தருதல்
>> நபிவழி வாழ்வியலை போதித்தல்.
>> ஸஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்களின் முன்மாதிரி இஸ்லாமிய வாழ்வியல் முறையை கற்பித்தல்.

இவைகள் இல்லாமல் உங்கள் பிள்ளைகளை நீங்கள் சிறந்தவராக வளர்க்க முடியாது.

இறைவனுக்கும் அவன் தூதருக்கும் பிடித்த மொழி அரபு மொழி. அரபு வார்த்தைகள் நம் நாவுகளில் தவழ்வதே பரக்கத். ஆனால், மக்தப் மதரசாக்கள் பக்கமே ஒதுங்காதவர்கள் தான், திருமண மேடையில் கலிமா சொல்ல தெரியாதவர்களாகவும், கபில்த்து என்று ஒப்பந்தம் செய்ய தெரியாதவர்களாகவும் வெட்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆமீன் என்கிற ஒற்றை வார்த்தையாகத்தான் இருக்கிறது. திருமணத்திற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழச் சொன்னால், தக்பீர் எப்படி கட்டுவது? அத்தய்யாத்தில் எப்படி அமர்வது? கால்களை எப்படி வைக்க வேண்டும்? என்று எதுவும் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். மார்க்க கல்வியில்லாத சாதாரண மக்களின் கோளாறு மக்தப் மதரசாவிற்கு செல்லாததும், அவர்களை பெற்றோர்கள் அனுப்பாததும் தான்.

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமை நாளில் அதை ஓதியவர்களுக்காக பரிந்துரை செய்யும்” (முஸ்லிம்)

குர்ஆனை ஓதியவருக்கு மறுமை நாளில் பகரா 
சூராவும், ஆலு இம்ரான் சூராவும் வாதாடும்

குர்ஆனை ஓதி அதன் படி அமல் செய்தவர்கள் மறுமை நாளில் வானவர்களோடு இருப்பார்கள்.”
இதுபோன்ற ஏராளமான ஹதீஸ்களை காண முடியும்.

குர்ஆனை ஓதுபவர் மன ரீதியாக நிம்மதியை பெறுகிறார். அது அவரை அவரை சரியான வழியில் நடத்துகிறது.

நாடறிந்த உலமாக்களின் பேச்சையும் செயலாற்றலையும் கண்டு வியக்கிறோம். எத்தனையோ உலமாக்கள் சமூகத்தில் எழுத்தாளர்களாக மின்னுகிறார்கள். கண்ணியத்தோடு இறைவனின் அருள் பெற்று வாழ்க்கை நடத்தும் அவர்களை கண்டு வியக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து ஊக்கப்படுத்திய வேலையை செய்தது மக்தப் மதரசாக்களே. அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியே அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நிர்வாகத்தின் கவனத்திற்கு:

மக்தப் மதரசாக்களில் நிர்வாகத்தின் தலையீடு என்பது மேஜை மற்றும் ஆண்டு விழாக்கான பரிசுகளுக்கு செலவழிப்பதோடு நின்றுவிடுகிறது. பெரும்பாலும் மக்தப் மதரசாக்களின் வடிவம், ஆர்வமூட்டுவதாக இல்லை.

மக்தப் மதரசாக்களை தனியார் பள்ளிகளைப் போன்று உருவாக்க வேண்டும். அதற்கு சில வித்தியாசங்களை எடுத்துக் காண்பித்தால் மதரசாக்களின் பலகீனங்களை சரி செய்யலாம்.

தனியார் பள்ளியில்
மக்தப் மதரசாவில்
தனித் தனி வகுப்பறைகள்
ஒரே அறை
வெவ்வேறு மாணவர்களுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள்
வெவ்வேறு மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர்
சீருடை
உடை
சுத்தம் கவனிப்பு
அசுத்தம் கவனிக்க மறுப்பு
விடுமுறை 10 நாட்களே (வருடத்திற்கு)
விடுமுறை …………………………………
பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்
பெற்றோர் ஆசிரியர்………………………………..?
நிர்வாகம் ஆசிரியர் கலந்துரையாடல்
நிர்வாகம் ஆசிரியர்……………………….?
பல கலைகள் கற்றல்
கலை………………….?
ஹோம்வொர்க்
-
க்ளாஸ்வொர்க்
-
காலாண்டு, அறையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள்
-
ஸ்கூல் பேக்
மதரசா ப்ளாஸ்டிக் பை, கவர்
டை, கைக்குட்டை, ஷூ, பெல்ட்
-
பலதரப்பட்ட போட்டிகள்
-
ஸ்பெஷல் கிளாஸ்
-
மாணவர்களுக்கு வேலை செய்ய தனியாட்கள்
மாணவர்களே வேலை செய்ய வேண்டும்
ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்
அரபியில் பேச …..?
ஸ்மார்ட் கிளாஸ்
-
ரேங்க் கார்டு
-
அடையாள அட்டை
-

இவ்வளவு வித்தியாசமுள்ள இந்த மதரசாக்களின் வடிவமைப்பை பார்க்கும் பிள்ளைகளுக்கு மதரசாக்களின் மீதும், பள்ளிகளின் மீதும், மார்க்க கல்வியின் மீதும் எப்படி ஈடுபாடு வரும்?

நம் பிள்ளைகளும் சரி, பிள்ளைகளின் பெற்றோர்களும் சரி. ஏன் மதரசாவை அலட்சியமாக பார்க்கிறார்கள்? என்பதை இப்போது புரிந்திருக்கலாம்.

தற்போதைய மக்தப் மதரசாக்களை நாம் எவ்வளவோ மாற்றியமைக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிர்வாகங்களுக்கு வேலை என்ன? ரமலான் மாத கஞ்சி ஏற்பாடு செய்வதும், ஐவேளை தொழுகை நடக்க செய்வது மட்டுமே வேலையல்ல. பள்ளிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு மதரசாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குறைகளை சரிசெய்து மதரசாக்களை உருவாக்கும் போது, நாளடைவில் அதைப் பள்ளிக் கூடங்களாக உருவெடுக்கும். பின்பு மாணவர்களுக்கு இஸ்லாத்தின் கருத்தியலோடு சேர்ந்த உலக படிப்புகளையும் கொடுக்கும் பட்சத்தில் சிறந்த மாற்றங்களை காணலாம்.

ஒரு சமூகத்தின் மாற்றம் என்பது பள்ளிவாசல்களிலிருந்தும் பள்ளிக்கூடங்களிலிருந்தும் தொடங்குகிறது. 1925-ல் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் என்று ஒரு அமைப்பு உருவாகுகிறது. அவர்கள் பாபர் பள்ளியை இடிக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் 1925 லேயே ஆரம்பமாகியது. இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். கிட்டத்தட்ட 20,000 பள்ளிக்கூடங்களை தன் வசத்தில் வைத்திருந்தார்கள். பாடத்திட்டத்தில் இராமரை கடவுளாக கொண்டு வந்தார்கள். 75 ஆண்டுகளுக்கு பிறகு ராமரை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. போதாக்குறைக்கு டிடி சேனலைத் தவிர வேறு எந்த சேனலும் இல்லாத நேரத்தில் இராமாயணம் என்று நெடுந்தொடரை நாடகமாக்கி நம்மையெல்லாம் பார்க்க வைத்தார்கள். அதன் பின்பே கரசேவை என்ற பெயரில் பள்ளியை இடித்தார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும். பாபர் பள்ளிக்கு வந்த பத்திரிகையாளர்கள், காவலர்களெல்லாம் பள்ளியை இடித்தார்கள் என்றால், அவர்கள் பயின்று வந்த பள்ளிகள் அவர்கள் மனதில் விதைத்த விதை அது.

மக்தப் மத்ரஸாக்களின் வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தில் முதன்மையானதும் முக்கியமானதும் என்ன தெரியுமா? தமிழகத்தில் நூற்றாண்டுகள் கடந்த பல மத்ரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவு என்பதை தாண்டி, பாரம்பரியம் மிகுந்த சில அரபி கல்லூரிகள் மூடுகின்ற அளவிற்கு வந்து விட்டது என்றால்...? மக்தப் மத்ரஸா என்கிற விதை வேறுன்றி மிக விரைவில் வலுப்படுத்தப்பட வேண்டிய விருட்சம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பல்வேறு துறைகளில் பின்தங்கியிருக்கும் நம் சமூகம் முன்னேற்றம் அடையவேண்டுமானால், தரமான ஆரோக்கியமான கல்வியை கொடுக்கும் பள்ளிகள் தேவை. இப்படி ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் உருவாகுமா? என்று தெரியவில்லை. ஆனால் மக்தப் மதரசாக்கள் நவீனமாகுதல் மூலம் இது சாத்தியமே.

வல்ல இறைவன் நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற நன்மக்களாக நம்மை ஆக்குவானாக! ஆமீன்!

No comments: