அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 30 July 2015

இந்திய ஆளுமைகளில் அப்துல் கலாம்



நம்மை விட்டும் காலம் சென்றவர்களின் நல்ல குணங்களை பற்றி மட்டுமே பேசுங்கள் என்றாரக்ள நாயகம்.


عن ابن عمر رضي اللّه عنهما أن رسول اللّه صلى اللّه عليه وسلم قال : " اذْكُرُوا مَحَاسِنَ مَوْتاكُمْ وكُفُّوا عَنْ مَساوِيهِمْ " ( أبو داود ( 4900 ) ، والترمذي ( 1019 ) ، وهو حديث حسن بشواهده

நம் மண்ணை விட்டு நீங்கிய போதிலும்,
நம் மனதை விட்டும் நீங்காத தலைவர் :

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். கனவு காணுங்கள் என்றவர் கனவில் கரைந்து போனார். அவரது மரணம் இந்திய மக்களையும் உலக தலைவர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிறப்பு சம்பவமாகலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார். அதை நடத்தி காண்பித்துள்ளார் இன்று. தொடர்ந்து ஊடகங்களில் அப்துல் கலாமைப் பற்றிய செய்திகளை பார்த்தும் கேட்டும் கொண்டிருக்கிறோம். உலக மக்கள் அனைவரும் அவர்களது இரங்கல்களை தெரிவிக்கிறார்கள். மாணவர்களின் அழுகை, நடைப்பயணமான அஞ்சலி என்று அவரவர்கள் அவரவர்களின் துக்கத்தை சிறிய சலசலப்பும் இன்றி மிகுந்த கண்ணியத்தோடும் மரியாதையோடும் வெளிப்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இது அப்துல் கலாமின் மீது மக்கள் கொண்ட  உயரி மதிப்பிற்கான நற்சான்றாகும்.

இந்திய ஆளுமைகளில அப்துல் கலாமின் இறப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சாதி, மதம், நிறம், மொழி, ஏழை, பணக்காரன், மற்றும் குழந்தை, முதியோர் என்கிற பாகுபாடுகள் கடந்து அனைத்து தரப்பு மக்களிடம் அவரின் இறப்பு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. காரணம் அவர் ஒரு இந்தியன் என்பதை விட இந்தியாவின்  பெருமைமிகு அடையாளம் அப்துல் கலாம், மாணவர்களின் கனவுலக நாயகன் என்பதே ஆகும்.

கலாமின் காலங்கள்:
1931 அக்டோபர் 15 அன்று ஜைனுல் ஆபிதீனுக்கும் ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமேஸ்வரத்தில் ஏழ்மையின் பின்னணியில் பிறந்தார். அங்கேயே தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். குடும்பத்தில் கஷ்டம் என்பதால் படிக்கும் போதே பேப்பர் விநியோகம் செய்து குடும்பத்தினருக்கு ஒத்துழைத்தார். பின்பு பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்பு அவர் ஆர்வப்பட்ட விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி.யில் படித்து அதில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1960ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (ஞிஸிஞிளி) விஞ்ஞானியாக சேர்ந்த அவர், தன்னுடைய ஆராய்ச்சியில் சிறிய ஹெலகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்பு இஸ்ரோவில் சேர்ந்த அவர் துணைக் கோள் ஏவுகளைப் பிரிவில் முக்கியப் பாங்காற்றினார். பின்பு 1980ல் SLR - III என்ற ராக்கெட்டைக் கொண்டு ரோகினி என்ற துணைக் கோளை வெற்றிக் கரமாக விண்ணில் ஏவினார். இதைப் பாராட்டி 1981ல் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவித்தது. பின்பு 1963 முதல் 1983 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பணிபுரிந்து 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். இதுவரை ஐந்து ஏவுகனை திட்டத்தில் பணியாற்றியுள்ளார். பின்பு பாரத ரத்னா விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2002 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 90 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். 2007 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றிய இவர், மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார். அறிவியலில் கரை கண்ட இவர், இந்தியாவை வல்லரசாக்க விரும்பினார். அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல கருத்தரங்குகளில் கலந்து உரையாற்றினார். ஜனாதிபதி பொறுப்புக்கு பிறகும் மாணவர்களை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அவர் விரும்பியவாறே அவர் மரணமடைந்தார். இது அவரின் வரலாற்றுச் சுருக்கம்.

விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

தான் பிறந்த நாட்டிற்கு பெயர் பெற்று தந்த அந்த மூத்த குடிமகனின் மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. தன்  குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்று உணர்கிறார்கள். காரணம் தன் இந்திய நாட்டின் அடையாளத்தை இழந்ததாகவே கருதுகிறார்கள். குழந்தைகளிலிருந்து மத துவேஷத்தை உமிழக் கூடிய காவிகள் கூட அவரின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் அவரின் சொந்த சமூகத்தை சார்ந்த சில விஷமிகள் பார்த்த வேலை என்ன தெரியுமா? பொது தளங்களில் அவரை தீவர மதவாதியாகயும் இறக்கமற்ற மதவெறியர்களாவும் அடையாளப்படுத்தினார்கள்.

எல்லோரும் கலாமை புகழும் வேளையில் அவர் இஸ்லாமியரே அல்ல என்று அவரின் ஈமானை எடை போட ஆரம்பித்துவிட்டார்கள் ஏகத்துவ விஷமிகள்.

ஒருவரின் மரணத்தையும் ஈமானையும் சோதனை செய்வதற்கு அவர்கள் ஒன்றும் படைத்த இறைவன் இல்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அவரின் குணநலன்களும் செயல்பாடுகளும் பல்வேறு சமயத்தவரும் விரும்பும்படியாக அமைந்திருக்கலாம். அதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வணக்கத்திற்குவரியன் அல்லாஹ்வை தவிர வேறுயாருமில்லை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்கிற அவரின் ஈமானை தனிப்பட்ட சமய வாழ்க்கையை துருவி பார்க்க யார் உரிமை கொடுத்தது? இது போன்ற கேடுகெட்ட குணத்தை அல்லாஹ்வூம் ரசூலும் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

நபிதோழர் உஸாமா (ரலி) அவர்கள் ஒரு யுத்தகளத்தில் ஒருவர் கலிமா சொன்ன போதும் அவர் நடைபெறும் போரில் கொலை செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கலிமா சொன்னார் என நினைத்து அவரை கொன்று விடுவார்கள். இவ்விஷயம் பெருமானரை அடைந்த போது நாயகம் நபிதோழர் உஸாமாவிடம் கேட்ட வார;த்தை மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

هلا شققت عن قلبه
அவர் முஸ்லிமா? அல்லது காபிரா? என்பதை நீங்கள் அவரின் உள்ளத்தை பிரித்து பார்த்தீர்களா என்ன உஸாமா?

நம்மை விட்டும் காலம் சென்றவர்களின் நல்ல குணங்களை பற்றி பேசுங்கள் என்றாரக்ள 
நாயகம்.
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : لا تَسُبُّوا الأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا وَرُوِّينَا عَنِ ابْنِ عُمَرَ مَرْفُوعًا : اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِئِهِمْ

ஒருவர் மரணித்த பிறகு அவரைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பேசினால் அவருக்கு சொர்க்கம் என்பது நபிமொழி.

عَنْ أَنَسٍ ، قَالَ : مُرَّ بِجِنَازَةٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : أَثْنُوا عَلَيْهِ ، فَقَالُوا : مَا عَلِمْنَا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ، وَأَثْنَوْا عَلَيْهِ خَيْرًا ، فَقَالَ : وَجَبَتْ قَالَ : ثُمَّ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ : أَثْنُوا عَلَيْهِ ، فَقَالُوا : بِئْسَ الْمَرْءُ كَانَ فِي دِينِ اللَّهِ ، فَقَالَ : وَجَبَتْ أَنْتُمْ شُهُودُ اللَّهِ فِي الأَرْضِ فَهَذَا وَمَا رُوِيَ فِي مَعْنَاهُ يَحْتَمِلُ أَنْ يَكُونَ فِيمَنْ كَانَ مُعْلِنًا بِشَرٍّ فَأَمَرَ بِالثَّنَاءِ عَلَيْهِ بِمَا يَعْلَمُونَ مِنْهُ لِيَنْزَجِرَ أَمْثَالُهُ عَنِ الشَّرِّ وَإِطَالَةِ الأَلْسُنِ فِي الأَلْسُنِ فِي أَنْفُسِهِمْ وَبِاللَّهِ التَّوْفِيقُ


இந்த அடிப்படை கூற்றைக் கூட விளங்கிக் கொள்ளாதவர்களெல்லாம் சமய போதகர்களாக மாறிவிட்டனர் எல்லாவற்றிலும் அவர்களின் இந்த மலிவான கண்ணோட்டமே நம் சமூகத்தை மிகவும் பின்னடைய செய்துவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பாக அண்ணாவின் மீலாது பேச்சு, மீலாது மேடையில் பெரியார் போன்ற வார்த்தைகளை கேட்க முடிந்தது. மீலாது மேடை என்பது சிறுபான்மையின அரசியலுக்கு பாலமாக அமைந்தது. இஸ்லாமியர்களின் அரசியல் வரலாற்றில் மீலாது மேடைகள் மிக முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இந்த ஏகத்துவவாதிகளின் விளக்கமற்ற வீண் விவாத்தல் அப்புனித மீலாது மேடைகளை குற்றமாக கருதும் மனோநிலை நம் இஸ்லாமிய சமூகத்தின் ஒரு சில சாராரிடம் உண்டாகி வருவதை கண்டு நாம் மிகவும் வருந்துகிறோம்.

இன்றும் எல்லா பள்ளிவாசல்கள் முன்பும் தினமும் சுப்ஹ் மற்றும் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாசலில் கையில் தண்ணீரோடு காத்திருக்கும் சகோதரர்கள். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நம்மை நாடி குழந்தைகளோடு ஓதிப் பார்க்க வந்தார்கள். அதற்கும் வேட்டு வைத்தது ஏகத்துவ பார்ட்டி. இவர்களின் மலிவான அரசியல் நம்மை பொதுத் தளத்திலிருந்து தூரமாக்கியது.

ஊரே கலாமை கொண்டாட ஒரு குறிப்பிட்ட கூட்டம் கலாமை ஏசுவதும் விமர்சிப்பதும், பிறரை முகம் சுழிக்க வைக்கிறது. அவரின் புகைப்படங்களை பார்த்துவிட்டு முடிவுக்கு வரும் அறிவுஜீவிகளே அவரின் மற்றொரு சம்பவத்தை கேள்விப்பட்டீர்களா?

அப்துல் கலாம் ஒரு முறை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மதுரை வழியாக வரும் வழியில் லுஹர் தொழுகைக்கான நேரம் பாங்கு சொல்லப்பட்டுவி்ட்டது கார் மதுரை ரோட்டில் வாடிப்பட்டியை நெருங்கயிருக்கும் நிலையில் மெயின் ரோட்டில் அழகான பள்ளிவாசல் உண்டு ..
அங்கே காரை நிறுத்தச்சொன்ன கலாம் அவர்கள் தன் பாதுகாவலர்களை போலீஸ்காரர்களை பார்த்து சொன்னாராம் ......நீங்கள் யாரும் என்னை பின் தொடர வேண்டாம் நான் செல்வது ஜனாதிபதியாகயில்லை சாதாரண குடிமகனாக இறை அடியானாக தொழுவதற்குத்தான் நான் நானாக சென்று வணங்கிவிட்டு வருவதே எனக்கு திருப்தியென்று பள்ளிக்குள்ளே சென்ற கலாமை பார்த்த தொழுகயாளிகள் அதிர்ச்சியடைந்து அவரை வரவேற்றபோது கூட யாவரிடமும் சிறு பிள்ளை போல கை கொடுத்து பழகி விட்டு தொழுகையை நிறைவேற்றிவிட்டு பின் கிளம்பியிருக்கிறார்

இன்னும் எவ்வளவோ இருக்கிறது...


அவர் தங்கிய அறையில் அவரின் மேஜையின் மேல் இருந்ததது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

அவரின் புத்தக அலமாரியில் ஸஹீஹுல் புகாரியின் மொழிபெயர்ப்பு.

அவர் சமய வழிபாட்டைப் பற்றி அவரின் ஆலோசகர் பொன்ராஜ்ஜிடத்தில் சென்று கேளுங்கள் சொல்வார்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவரை சமய அடையாளத்தோடு நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் சமய அடையாளத்தோடு உங்களைத் தான் இதுவரை நாங்கள் கண்டதில்லை.

அப்துல் கலாமின் அழகிய பண்புகள்:

ஒவ்வொரு இஸ்லாமியனும் தன் மரணம் வரை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று தொழுகை. அதன் நிறைவுப் பகுதியில்  'இறைவா என் ஆசிரியர் பாவங்களையும் மன்னித்துவிடு' எனத் தொழுகையில் தன் ஆசிரியருக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதின் வழியாக ஆசிரியர் மகத்துவத்தை இஸலாம் நமக்கு கற்றுத் தருகிறது

'ராமேஸ்வரத்திற்கு அப்பால் யோசிக்கப் பழகு' என்ற ஆசிரியரின் ஊக்கமும்பறவை பறத்தல் அறிவியல் பற்றியான வகுப்பும் தான் இவ்வுலகிற்கு நம் கலாமை  இந்திய விஞ்ஞானியாக அடையாளப்படுத்தியது என்பதை வாழ்வின் உச்சக்கட்ட புகழை அடைந்த போதும் தன் விஞ்ஞான அறிவின் மாபெரும் ரோல்மாடல்கள் ஆசிரியர்கள் தான் என்பதை தன் மேடை உரையில் மாணவர்களுக்கு சொல்ல மறந்ததில்லை.

மாணவர்களை நேரில் கண்டு ஊக்குவிக்கும் அவர், எளிமையாக இறங்கி பழகுவார். மாணவ்ர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காத்திருந்து பதில் சொல்வார். 5 வயது குழந்தை கேள்வி கேட்டால், அந்தக் குழந்தைக்கு ஏற்றாற்போல் பதில் சொல்வார்.

தான் செல்லும் பயணங்களுக்கு தன் சொந்த செலவில் பயணம் மேற்கொள்வார்.

தன் சொந்த ஊர் இராமேஸ்வரத்துக்கு பிரத்யேகமாக எதுவும் செய்யவில்லை. பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதற்காக மற்ற ஊர்கள் எப்படி இருக்கிறதோ அப்படியே தன் ஊரையும் பார்த்தார்.

அவருக்கென்று கோடிக் கணக்கான சொத்துக்கள் இல்லை.

அவருக்கு வரும் எந்த கடிதத்திற்கும் மெயிலுக்கும் பதில் அனுப்பும் வழக்கமுடையவர்.

மதநல்லிணக்கத்தை கடுமையாக பின்பற்றியவர்.

ஒரு விஞ்ஞானியாக உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தார். பல்வேறு கண்டுபிடிப்புகள் செயற்கை கால், இராணுவத்திற்கு ஹெலிகாப்டர், ராக்கெட் என்று கண்டுபிடித்தார். விஞ்ஞானத்தின் உச்சத்தைத் தொட்ட அவர், அதற்கு நேர் எதிர்மறையான இலக்கியத்திலும் தடம் பதித்தார். சென்ற இடமெல்லாம் திருக்குறளை பரப்பினார். பல நூல்களை எழுதினார். அக்னி சிறகுகள் என்கிற நூல் மிகவும் பிரபலமானது. தமிழில் பயின்று தமிழுக்கும் தமிழ்நாடுக்கும் பெருமை சேர்த்தார்./ எழுத்தாளர், பேச்சாளர், விஞ்ஞானி, ஆசிரியர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடைய கலாம் அனைவருக்கும் பிடித்த மனிதராய் காலமானார்.

அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியர் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் அடுத்தது யார்? நம் பிள்ளைகளில் எத்துனை பேர் தயாராகிறார்கள்? இஸ்லாம் அறிவியலை என்றும் எதிர்த்ததில்லை. குர்ஆனும் நபிமொழியும் இன்றைய நவீன விஞ்ஞானத்தின் தன்னிகரற்ற முன்மாதிரி முன்னோடியாகும்.

குர்ஆனின் அறிவியல் தூண்டல்:

أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (17) وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ (18) وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ (19) وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ (20)

ஒட்டகையை - அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கவனிக்க வேண்டாமா? (89:17) என்பதில்  உயிரியல்  குறித்தும், வானத்தை - அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது (89:18) என்பதில் வானவியல் குறித்தும், மலைகளை -  அது எவ்வாறு நட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், பூமியை - அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? (89:19-20) என்பதில் புவியியல் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94) قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا 
(96)

இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள் ( என்றார் அது கொண்டு வரப்பட்டு) இரு மலைக்கிடையில் (உச்சி வரை) சமமான பொழுது, அதனை நெருப்பாக ஆக்கும் வரை ஊதுங்கள் எனக் கூறினார். (பின்னர; செம்பை உருக்கி) என்னிடம் கொண்டு வாருங்கள். (அந்த) உருக்கிய செம்பை அதன் மீது நான் ஊற்றுகிறேன் என்றும் துல்கர்னைன் (அலை) அவர்கள் கூறினார்கள். (16:96)

துல்கர்னைன் (அலை) அவர்கள் குறித்தான இந்நிகழ்வில் இரும்புப் பாலத்தால் அணைக் கட்டுகிற முறையைச் சொல்வதில் பொறியியல் குறித்தும், செம்பை உருக்கி கொண்டு வாருங்கள் என்பதில் வேதியியல்  குறித்தும் குர்ஆன் பேசுகிறது.

பூமி எப்போது எப்படி உருவானது?
பூமி எப்போது எப்படி உருவானது? அதில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் எங்கிருந்து வந்தது? - விஞ்ஞானம் தோன்றிய நாளிலிருந்து பரவலாக வினவப்படுகிற கேள்வி இது.

பூமி உருவானது குறித்து பல அறிஞர்கள் பல அரிய வகையிலான ஆய்வுகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர். ஆனாலும் சரியான பதில் கிடைத்தப்பாடில்லை. ஆராய்ச்சி முடிவுகளும் அறிவியல் உலகால் அங்கிகரிக்கப்படவும் இல்லை.

ஒரு வழியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியற் கொள்கை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக, ஆதியில் சூரியன், பூமி பிற கோள்கள், மற்றும் வான்பொருள்கள் அனைத்தும் அடர்த்தியுடன் கூடிய மிகுந்த வெப்பம் நிறைந்த ஒரே வாயு மண்டலமாக  இருந்திருக்க வேண்டும் எனவும், பின்னர் ஒரு பெரு வெடிப்பின் மூலமாக இவை பிரிந்து சிதறி தற்போது நாம் பார்க்கிற அமைப்பில் உருவாகியிருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கூறினர்.

பெரு வெடிப்பின் மூலமாக எவ்வாறு வானமும், பூமியும் மற்ற கோள்களும் உருவானது என்பதை 1978 ல் பென்ஜியாஸ், வில்ஸன் என்ற இரு விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகளின் மூலமாக நிரூபணம் செய்தார;கள். அதற்காக அவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அறிவியலின் இன்றைய இந்த ஆய்வு முடிவை குர;ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மெய்ப்படுத்து விட்டது.

أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقاً فَفَتَقْنَاهُمَا

வானங்கள், பூமி அனைத்தும் ஓன்றொடொன்று சேர;ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம். ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம். (21:30)

இதன் விளைவு தான் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஷிஃபா (ரலி) என்கிற பெண் ஸஹாபி மருத்துவராக இருந்திருக்கிறார்கள். மனோதத்துவ நிபுணராக விளங்கியிருக்கிறார்கள்.

ருஃபைதா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்து அடிபட்ட ஸஹாபிக்கு மருத்துவம் பார்க்க சொல்லியிருக்கிறார்கள்.

கலீபா மாமூன் காலத்தில் இப்னு அப்துல்லாஹ் அல்ஹமாபி, அபு அப்துல்லாஹ் அபூ ஸையித் அஹ்மது இப்னு சாலிஹ் பூக்கோள வரைபடைங்களை உருவாக்கினர்.

கலீபா மாமூன் காலத்தில் முஸ்லிம்களின் முதலாம் வானிலை மையம் பக்தாதின் பக்கத்தில் ஷம்ஸியா எனும் இடத்தில் வானிலை ஆய்வாளர்களான யஹ்யா இப்னு மன்சூர், மற்றும் அப்பாஸ் அல்ஜவ்ஹரி ஆகியோரின் தலைமையிலும், பின்பாக தமாஸ்கஸிற்குப் பக்கத்தில் குவாஸியூன் எனும் இடத்தில் வானிலை ஆய்வாளரான காலித் அவர்களின் பொறுப்பிலும் வானிலை ஆய்வு குறித்து பல தரப்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வரிசையில் வல்லரசுகளை அதிரவைத்த இந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற இஸ்லாமிய தமிழ் விஞ்ஞானி நம் அப்துல் கலாம் ஆவார்.

இஸ்லாமிய சமூகமே
அபுல் கலாம் ஆசாத் முதல் அப்துல் கலாம் வரை எத்தனையோ ஆளுமைகள் இந்தியாவின் மிக முக்கிய பதவிகளில் பங்காற்றி பல சேவைகளை இந்நாட்டிற்கு செய்திருக்கறார்கள். ஆனால் இன்று பாராளுமன்றத்திலோ அல்லது சட்ட சபையிலோ எத்துனை இஸ்லாமியர்கள் இருக்க வேண்டுமோ அந்த எண்ணிக்கையில் இல்லை. நம் சமூகத்தில் அரசியல் தன்மை குறைந்து கொண்டே வருகிறது.

அப்துல் கலாமின் நிறைவேறாத ஆசைகள் என்ற பட்டியலை நிறைவேற்றுவதில் நாமே முன்வரவேண்டும். இந்தியாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வளர வேண்டும்.

மரண தண்டனையை கடைசி வரை எதிர்த்தார் கலாம். ஆனால் சுதந்திர இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தூக்கலிடப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அஜ்மல் கசாப், அப்சல் குரு, இப்போது யாகூப் மேமன். சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கட்சி அமைப்பினர்கள் என்று அனைவரும் எதிர்க்கிறார்கள். ஆனால் என்ன செய்ய முடிந்தது?

நம் சமூகம் தொலைநோக்கு பார்வையோடு ஒரு கலாமை போல் செயல்பட வேண்டும். பொறுமையோடு செயல்பட வேண்டும். நல்ல அடித்தளத்தோடு சரியாக நோக்கத்தோடு தகுந்த உழைப்போடு தொடர்ச்சியாக செயல்பட்டால் பல கலாம்களை உருவாக்கலாம். உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

 இப்னு ஃபிர்னாஸ், இப்னு ஃபத்லான் போன்ற அறிவியல் அறிஞர்களின் பரம்பரையிலிருந்து வந்திருக்கிறோம். குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு இருக்கும் நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறோம். வரலாற்றை இழந்தோம், நிலங்களை இழந்தோம், இப்போது அபுல் கலாம் ஆசாத் முதல் அப்துல் கலாம் வரை ஆளுமைகளை இழந்து நிற்கிறோம்.. இனி ஆளுமைகளை உருவாக்குவோம். விதையாய் விழுந்திருக்கிறார் கலாம். மரங்களாகவும் பலன் தரும் பழங்களாகவும் வளர்வோம்.

No comments: