அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 6 August 2015

மக்கள் போராட்டமாகும் மதுவிலக்கு




மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகிறது. ஆளுங்கட்சியோ இது வெறும் அரசியலே தவிர வேறில்லை என்று சப்பக்கட்டு கட்டுகிறது. 25 ஆண்டுகளாக சசிபெருமாள் கூச்சலிட்டபோது யாரும் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவரது மரணத்திற்கு பிறகு இது ஒரு மக்கள் போராட்டமாக வெடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை தாண்டி மாணவர்களும், பெண்களும் பொது மக்களும் இதை கையிலெடுத்திருக்கிறார்கள். இதன் விளைவு சில கட்சிகள் வேறு வழியில்லாமல் மதுவிலக்கை ஆதரிக்கிறது. மதுவிலக்கின் பின்னணியில் எந்த அரசியல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மதுவிலக்கு அமலுக்கு வந்தாக வேண்டும்.

இஸ்லாத்தை பொறுத்த வரையில் மது என்பது தடுக்கப்பட்டது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மதுவின் தீங்குகளைப் பற்றி நம்மைவிட அருந்துபவருக்கு நன்றாகவே தெரியும். இங்கு பிரச்னை அதுவல்ல. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்த வரையில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதுவினால் ஏற்படும் தீங்குகளைப் பற்றி அரசாங்கம் அறியும். இருந்தபோதும் அரசாங்கம் முன்வைக்கும் காரணங்களை அலச வேண்டும்.

அரசாங்கம் சொல்லும் வெளிப்படையான காரணங்கள்:

·         மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் புழக்கத்தில் வரும். அதனால் அதிகமான மரணங்கள் ஏற்படும்.

·         மதுவிலக்கு நாடு முழுவதும் தோற்றுப்போன திட்டம். இதனால் குடிப்பவர்களை தடுக்க முடியாது.

ஆனால் மதுவிலக்கை அமல்படுத்துவதில் அரசாங்கத்தை தடுக்கும் ஒரே விடயம் “டாஸ்மாக்கில் வரும் வருமானம் அடிபடும் என்பதே.

மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசாங்கமே சரியாக செய்கிறது என்று ஆய்வுகள் கூறுவதாக ஆளுங்கட்சி கூறிக் கொள்கிறது. மக்களுக்கான முன்னேற்றம் என்பது அவர்களுக்கு இலவசங்கள் வழங்குவது அல்ல. அவர்களை சமூக அனாச்சாரங்களை விட்டும் தூரமாக்கி ஒழுக்கமுள்ள நேர்மையான சமூகத்தை உருவாக்குவதே ஆகும். ஆனால் இன்றைய அரசியலில் அதற்கு இடமில்லை. அப்படி பேசுபவன் அரசியலில் ஜெயிக்கப் போவதுமில்லை. தன் மக்கள் மீது அக்கறையுள்ள எந்த அரசாங்கமும் மதுவை ஆதரிக்காது. மக்கள் மீது அக்கறையுள்ள கேரள அரசாங்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தைவிட கேரளத்தில் தான் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் வருகிற வருமானத்தை பார்க்காமல் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். அதுவே மக்கள் நலன் கருதுவதாக பொருள்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட நம் மக்களை திடீரென்று மதுவிலக்கை அமலாக்கி தடுத்து நிறுத்தினால் எதிர்பார்த்திடாத அசம்பாவிதங்கள் நடக்கலாம். மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும். அதே சமயம் மக்களால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும். எப்படி?

மதுவிலக்கை ஆதரிக்கும் நம் கண்ணோட்டம்

மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும். அதில் படிப்படியாக வெற்றி காண வேண்டும். எடுத்த எடுப்பிலேயே மதுவை அழித்து ஒழித்துவிட முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. இதற்குமுன் மதுவிலக்கை அமல்படுத்தி வெற்றி கண்ட வரலாற்றை பார்த்தால் தெரியும் அவர்கள் எப்படி மதுவிலக்கை அமல்படுத்தினார்கள்? அதில் எப்படி வெற்றி கண்டார்கள்? என்று ஆராய வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை அரேபியர்களின் நிலை எவ்வாறு இருந்த்து? அவர்களும் மதுவுக்கு அடிமையாகத் தானே இருந்தார்கள்? குடிப்பழக்கம் இல்லாதவன் ஆண்மையில்லாதவன் எனுமளவுக்கு கருதியிருந்தார்கள். மதுவிலிருந்து அவர்களை விலக்க நினைத்த இறைவன் என்ன செய்தான்? எப்படி சட்டங்களை அமலாக்கினான்? எப்படி பூரண மதுவிலக்கு இஸ்லாத்தில் சாத்தியமானது?

يَسْأَلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ قُلْ فِيهِمَآ إِثْمٌ كَبِيرٌ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ كَذٰلِكَ يُبيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلأيَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதைஎனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றான்.’ (2:219)

அடுத்த கட்டமாக,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ

நீங்கள் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்’ (4:43)

அடுத்த கட்டமாக,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللّهِ وَعَنِ الصَّلاَةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ

ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது, சூதாட்டம் என்பவற்றின் மூலம், உங்களுக்கிடையில் பகைமையையும், குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?’ (5:90-91)

மேற்சொன்ன வசனங்களை கவனித்தால் ஒன்று புரியும்.
1.       முதல் வசனத்தின் மூலம் மதுவினால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது.
2.       இரண்டாம் வசனத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மது தடுக்கப்படுகிறது.
3.       மூன்றாம் வசனத்தின் மேற்சொன்ன இரண்டையும் ஏற்றுக் கொண்ட பிறகு, வாழ்விய்லின் அடிப்படையை விட்டும் திசைதிருப்பி, கேடுகளை விளைவிப்பதால் பூரண மதுவிலக்கு அமலாகிறது.

இதே முறையை தமிழகம் கையாண்டால் கண்டிப்பாக மதுவிலக்கு வெற்றியடையும். மதுவிலக்கை அமல்படுத்த நினைக்கும் எந்த அரசாங்கமும் இதைத் தான் கடைப்பிடித்தாக வேண்டும்.

முதல் படியாக, பள்ளிகளின் பாடங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தினந்தோறும் மதுவினால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். மதுவின் துமைகளை விளக்கும் எந்த திட்டக்ளையும் அரசாங்கம் செயல்படுத்த முன்வர வேண்டும். எல்லா தொகுதிகளிலும் ரேஷன் கடை இருப்பதை போன்று கவுன்சிலிங் சென்டர்களை அமைத்து பகுதியில் உள்ள அனைவரையும் நேராக சென்று சந்தித்து பேச வேண்டும்.

இரண்டாவதாக, மீலாதுந் நபி, காந்தி ஜெயந்தி போன்ற புனித நாட்களில் தடைசெய்வதைப் போன்று ஆங்காங்கே பள்ளிக்கூடங்களுக்கு அருகிலும், மருத்துவமனைக்கு அருகிலும் வுழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் கட்டப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளையும் தடைசெய்ய வேண்டும். மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; தூரமாக்க வேண்டும். மதுபானக் கடைகளை குறைக்கும் திட்டங்களையும் மதுஆலைகளை தடைசெய்யும் திட்டங்களையும் அரசாங்கம் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, பூரண மதுவிலக்கு அமலாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்த வேண்டும்.
மதுவிலக்கை அமலாக்கிவிட்டால், கண்டிப்பாக சில அசம்பாவிதங்கள் நடந்தாலும் கண்டிப்பாக குடிப்பவர்களின் எண்ணிக்கைக் குறையும். சமீபமாக சிறுவர்களும் பெண்களும் மாணவர்களும் மது அருந்துவதை தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கிறோம். 

உதாரணமாக 100 பேர் குடிக்கிறார்களென்றால், மதுவிலக்கை அமல்படுத்தினால் குறைந்த்து 20 பேர் குடிப்பதை நிறுத்துவார்கள். காரணம் அந்த 20 பேர் தினமும் குடிப்பவர்கள் அல்ல. குடிக்கு அம்மையானவர்களும் அல்ல. அதனால் 20 பேர் குடியை நிறுத்துவார்கள். அதுமட்டுமல்ல புதிதாக குடிக்க நினைப்பவர்களுக்கும் வாய்ப்புகள் இருக்காது. மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் புதிதாக குடிக்க மாட்டார்கள். அப்படி ஒரு 20 பேரை தடுத்து நிறுத்தலாம். ஆக மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் 100ல் 40 பேரை காப்பாற்றிவிடலாம். மீதமுள்ளவர்கள் இந்த்த் தலைமுறையோடு சென்றுவிட்டாலும், அடுத்த தலைமுறையை காப்பாற்றிவிடலாம்.

குடிப்பழக்கம் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்க, மதுவிலக்கை இப்போதே அமல்படுத்த வேண்டும்.

எல்லை மீறும் அதிகார வர்க்கம்

அரசாங்கத்தின் ஆதரவால் டாஸ்மாக் கடைகள் எல்லை மீறி செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 1500க்கும் அதிகமான முறைகேடாக டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளை காவலர்கள் பாதுகாப்பதே அபத்தம். டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்களையும் பின்பு பாரில் சென்று குடிப்பதையும் பார்த்துக் கொண்டேயிருக்கும் காவல் துறையினர்,  குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை மட்டும் தடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பள்ளிக் கூடங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளது. மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதிகார வர்க்கத்தின் இந்த எல்லை மீறுதலே தமிழகத்தில் மது அதிகரித்ததற்கு காரணம்.

மதுவிலக்குக்கு ஆதரவாக கட்சிகளும் அமைப்புகளும்

கட்சிகளைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியை தவிர்த்து எல்லாக் கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவு அளிக்கிறது. பா.ம.க நாங்கள் மட்டும் தான் இதை ஆதரிப்போம் என்று வழக்கம் போல் சொதப்புகிறது. முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஒரு புள்ளியில் வந்து அமைவது இதுவே முதல் முறை. ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு முறையில் நடந்தாலும் கோரிக்கை ஒன்று தான். சிறிய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செய்லபடுகிறது. இது மூன்றாவது கூட்டணியாக அமைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் எந்தக் கட்சியானாலும் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பிறகு வேலையைக் காண்பித்தால் அடையாளமற்ற அமைப்பாக செல்வதற்கும் வாய்ப்புண்டு. கடைசியில் மதுவிலக்குக்கு பேர் போன தே.மு.தி.க வே ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் நான் எதற்கும் அசையமாட்டேன் என்றிருக்கிறார் ஜெ. ஒரு அரசாங்கம் மக்கள் போராட்டத்திற்கு செவி மடுக்காமல் இருப்பது அவமானம். குறைந்தபட்சம் நடவடிக்கை எடுப்பதைப் போன்று சைகை காண்பித்திருக்கலாம். ஆனால் நத்தம் விசுவநாதனின் அறிக்கையிலே தெரிந்துவிட்டது; மதுவிலக்கு ஏற்படாது என்று. காவேரி பிரச்னையில் விடாப்படியாக இருந்த ஜெ. பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்தில் விடாப்படியாக இருந்த ஜெ. இதில் கொஞ்வமாவது விட்டுக்கொடுத்திருக்கலாம்.

ஆனால், ஒன்று 25 வருடமாக போராட்டம் நடத்திய சசி பெருமாளை நேரில் சென்று யாரும் பார்க்கவில்லை. இந்தக் கட்சிகளும் அமைப்புகளும் அவர் மரணத்திற்கு முன்பே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், ஒரு போராளியை காப்பாற்றியிருக்கலாம். தமிழக மண்ணின் குணாதிசயம், இழந்த பின்பே அழுவார்கள்.


மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இனி சில கட்சிகளுக்கும் கேடு.

1 comment:

ஹபீப் ஆலிம் நூரி said...

Alhamdhu lillah arumayana super katturai