அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 3 September 2015

ஆசிரியர்களின் மாண்பு




ஒருவருக்கு இரண்டு விதமான முன்னேற்றங்கள் மிகவும் முக்கியம்:

1.       ஒழுக்கம் சார்ந்த முன்னேற்றம்
2.       அறிவு சார்ந்த முன்னேற்றம்

இவையிரண்டும் ஒருவருக்கு ஒருசேர கிடைக்கும்போது மட்டுமே சமூகத்தின் அடையாளமாக மாற முடியும்.

ஒருவரின் முன்னேற்றத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் இருவரும் மிக முக்கிய பங்காற்றினாலும், இன்றைய காலத்தை பொறுத்தமட்டில் ஆசிரியர்களே அதிக பங்காற்றுகிறார்கள் எனலாம். காரணம், ஒரு நாளில் அதிக மணி நேரங்களை பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலே கழிக்கிறார்கள். 4 வயதிலிருந்து 20 வயது வரை பிள்ளைகளின் தொடர்பு ஆசிரியர்களோடு பிணைந்திருக்கிறது.

செல்வங்களை பிறருக்கு கொடுத்தால் குறையும். பெற்றவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தாலும் குறையும். உலகின் பல்வேறு அசையும், அசையா சொத்துக்கள் கைமாற கைமாற குறைந்து கொண்டே இருக்கும். இன்னும் ஒருபடி மேல் தேய்மானத்திற்கு ஏற்றாற்போல் மதிப்பும் குறையும். ஆனால் அறிவு என்பது அப்படி அல்ல. பிறருக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாது; வளரும். இதற்கு தேய்மானம் ஏற்படாது. கைமாற கைமாற பட்டை தீட்டப்படும்.

எனவே தான் யார் அந்த வேலையை செய்கிறார்களோ அவர்களே மிகச் சிறந்தவர்கள் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

خيركم من تعلم القران وعلمه

எவர் குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்.

குர்ஆனை கற்றுக் கொள்வது என்பது அரபி மொழியைக் கற்றுக் கொண்டு, மக்தப் மதரசா பிள்ளைகளுக்கு குர்ஆனை ஓத கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. அதன் விளக்கங்களையும் அதன் ஞானங்களையும் சேர்த்துத் தான்.

பள்ளிகளில் நமக்கு பாடம் எடுப்பவர்கள் மட்டுமே நமக்கு ஆசிரியர்கள் அல்ல. நம் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாத பல விஷயங்களை யார் யாரோ நமக்கு கற்று கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு படிப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. தகுந்த வயது இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கள்ளக் கபடமில்லாத சிரிப்பு, பொய்யில்லாத பேச்சு, வஞ்சகமில்லாத விளையாட்டு இவையணைத்தையும் கற்றுக் கொடுக்க நமக்கு கலாம் தேவையில்லை: ஒரு குழந்தை போதும். ஆனால் மேற்சொன்ன மூன்றுமே வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதுபோன்று எவ்வளவோ உதாரணங்களை நம் வாழ்க்கையிலேயே நம் அனுபவங்களிலேயே பார்க்க முடியும். சில நேரங்களில் நம் பிள்ளைகளே நமக்கு ஆசிரியர்களாக மாறிவிடுவார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு தெரியாத அறிவையும் அனுபவத்தையும் கற்றுக் கொடுத்த அனைவருமே நமக்கு ஆசிரியர்கள் தான்.

திருக்குர்ஆனில் அறிவு மற்றும் சிந்தனை சார்ந்த வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக எவ்வளவோ வசனங்கள் இறங்கியிருப்பதை நம்மால் பார்க்க முடியும். எல்லா அமல்களையும் விட கல்வி கற்பதும் அதன் சிந்தனையுமே சிறந்தது. இதுபோன்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கல்வியைப் பற்றி எவ்வளவு சிறப்பாக கூறப்பட்டிருந்தாலும் அதைவிட கல்வியை கற்றுக் கொடுத்தவரின் சிறப்பு பலமடங்காகும்.

குர்ஆனைவிட நபியே சிறந்தவர்கள், மத்ஹபுகளைவிட இமாம்களே சிறந்தவர்கள், இறைவனைப் பற்றி அறியும் ஞானத்தைவிட அதைக் கற்றுக் கொடுத்த ஆசான் ஷைகே சிறந்தவர்கள்.

அனைத்து உறவிலும் தனக்கு கீழ் இருப்பவன் தனக்கு மேல் வந்துவிடக்கூடாது என்பதற்கு பொறாமை, வஞ்சகம் போன்ற அற்ப நோய்கள் நம்மை அரிக்கும். ஆனால் ஆசிரியர் – மாணவன், குரு – சீடன் என்ற இந்த உறவுகளில் மட்டும் தான் பொறாமையும் பொறாமைப்படுகிறது. இதுபோன்ற அற்ப எண்ணங்களை தவிடு பொடியாக்கிவிடுகிறது. தன்னைவிட மேல் வருவதற்காகவே பயிற்சி கொடுக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் .....................?

“சட்டியில் இருப்பது தான் ஆப்பையில் வரும் என்பார்கள். ஆசிரியர்கள் தங்களிடத்தில் என்ன தகுதியை வைத்துள்ளார்களோ அதை மட்டும் தான் மாணவர்களுக்கு கொடுக்க முடியும். ஆசிரியர்களுக்கு தெரியாத ஒன்று மாணவர்களுக்கு வருவது சாத்தியமே இல்லை. எனவே தான் எல்லா பள்ளிகளிலும் வெவ்வேறு வகுப்பிற்கு வெவ்வேறு ஆசிரியர். அந்த ஆசிரியர் குறிப்பிட்ட அந்த துறையில் தகுதி பெற்றிருப்பார். ஆனால் இன்று அதிலும் ஊழல் வந்துவிட்டது எனலாம்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்க்க முன்வருவதில்லை. காரணம் அங்கு முறையான பயிற்சி கொடுக்கப்படாது. ஆனால் உண்மை என்னவென்றால், முறையான பயிற்சி மேற்கொண்ட தனியாரைவிட அதிக சம்பளம் பெறக் கூடிய ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கூடங்களிலே இருக்கிறார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக வரவேண்டுமென்றால், ஆசிரியருக்கே உரித்தான இந்தெந்த தகுதிகளையெல்லாம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் அப்படியல்ல. ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலே போதும். குறிப்பிட்ட சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர் இருந்த போதும் பெற்றோர்கள் ஏன் அங்கு சேர்ப்பத்தில்லை. காரணம் தனியாரிடம் இருக்கும் கண்காணிப்பும் நிர்வாகமும் அரசாங்கத்தில் இருப்பதில்லை.

கண்காணிப்பு இருந்தால் மட்டுமே எங்கள் வேலையை நாங்கள் சரியாக செய்வோம் என்பவர்கள் நிச்சயம் ஆசிரியருக்கான தகுதியை பெற முடியாது. இதுபோன்ற இடங்களில் தான் ஆசிரியர்கள் தங்களது மாண்ப இழக்கிறார்கள். இருந்தபோதும் அரசு பள்ளிகளில் குற்ற உணர்வோடு வேலை செய்யும் சிலர்களையே பிற்காலத்தில் உயரிய பதவிகளுக்கு வருபவர்கள் “என் ஆசிரியரைக் கொண்டே நான் இந்த நிலைக்கு வந்தேன்என்று சான்றளிக்கிறார்கள்.

நம் சமூகத்தில் உலக படிப்புகளை படித்துவிட்டு ஒரு பட்டம் பெற்று அதை வைத்து தன் அன்றாட வாழ்வை நகர்த்துபவர்களே அதிகம். மருத்துவம், வழக்கறிஞர் போன்ற சேவைத் துறைகளில் படித்துவிட்டு சேவை செய்யக் கூடியவர்கள் மிக மிக குறைவு. சமூகத்தின் மீது இவர்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பைவிட அக்கறையைவிட ஒரு ஆலிமுக்கே அதிக பொறுப்பு உண்டு. எனவே தான் அவர் பல்துறை வல்லுநராக உருவாக வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். மருத்துவரை உருவாக்கும் ஆசிரியர் நிச்சயம் பல அறுவை சிகிச்சைகளில் அனுபவம் பெற்ற சிறந்த மருத்துவராக இருக்கிறார். வழக்கறிஞரை உருவாக்கும் வழக்கறிஞர் நிச்சயம் பல வழக்குகளில் வாதாடி வென்ற சிறந்த வழக்கறிஞராக இருக்கிறார். ஆனால் சமூகத்திற்கு எல்லா வகையிலும் களப்பணியாற்றக்கூடிய ஒரு ஆலிமை உருவாக்கும் ஆசிரியர் (உஸ்தாத்) அனுபவம் வாய்ந்த முதிர்ச்சிப் பெற்ற பல்துறை வல்லுநரா? மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறேன் “சட்டியில் இருப்பது தான் ஆப்பைக்கு வரும் 


பேராசிரியராக பெருமானார் (ஸல்)

ஒரு பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆசிரியராக செயல்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு ஸஹாபிகளுக்கு ஏற்றாற்போல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை ஆசிரியர்களாக, அழைப்பார்களாக. நீதிபதிகளாக அனுப்பிய வேளைகளில் இந்த அம்சத்தையே அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்'

'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்)

மக்களுக்கு அறிவூட்டும் ஆசானாகத் திகழ்ந்த நபியவர்கள் தம்மிடம் போதனைகளைப் பெற வருவோரை அன்பாகவும் பண்பாகவும் நடத்துபவர்களாக இருந்தார்கள் என்பதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது. 

''நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்'' (3:159)

ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, தடியைப் பயன்படுத்துவது இஸ்லாமிய கல்வி முறையில் வரவேற்கப்படுவதில்லை. ஏனெனில், தடியைப் பாவிப்பது, நாம் இதுவரை விளக்கிய மாணவர்களை அன்புடன் நடாத்தும் பான்மைக்கு முரணானதாகும்.'நபி (ஸல்) அவர்கள் தமது கையினால் எந்தவொரு பெண்ணையோ, பணியாளனையோ அல்லது மிருகத்தையோ அடித்ததில்லை' என அன்னாரின் சேவகனாகவிருந்த அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

பிள்ளைகள் பத்து வயதை அடைந்த பின்னரும் தொழுகையை நிறைவேற்றாத வேளையில், அவர்களை அடிப்பதற்குப் பெற்றோருக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. இது தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விதிவிலக்காக அமைந்த ஒரு சட்டமாகும்.தவறு செய்தவனுக்கு அனுதாபம் காட்டல்மாணவர்கள் தவறு செய்யும் போது கடுமையாக நடந்து கொள்வது, தண்டிப்பது, பரிகசிப்பது போன்ற அணுகுமுறைகளை விட, அவர்களின் மீது அனுதாபம் கொள்வதே வரவேற்கத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காண்கின்றோம்.

ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தனர். உடனே நபியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ''அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவரையணுகி, ''இப்பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்குத் தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை 'திக்ர்' செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்'' என்று கூறிவிட்டு, ஒருவரை அழைத்து, ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள்.

இங்கு நபியவர்கள், அந்த மனிதர் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு, அவர் செய்த தவறை எவ்வாறு அனுதாபத்துடன் நோக்கி, மிகவும் நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கின்றோம்.இவ்வாறு, ஒரு பாடசாலைக்கு வரும் மாணவர்களும் வித்தியாசமான குடும்பங்களிலிருந்து வருவார்கள். முரண்பட்ட பண்புகளுடையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் மிகவும் அனுதாபத்துடன் நோக்குவதே சாலச் சிறந்ததாகும்.அன்புகாட்ட வேண்டும், அனுதாபம் கொள்ள வேண்டும் எனும்போது, தவறு செய்தவர்களை அவர்கள் செய்த தவறுகளைக் சுட்டிக்காட்டாமலேயே விட்டு விட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக, நாசுக்காக, தேவையைப் பொறுத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றையுணர்த்துவது பிரதானமாகும். திறமைகளைப் பாராட்டுதல் மாணவர்களுக்கு அன்பு காட்டுவது, அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி, நாசுக்காகத் திருத்துவது போன்றவற்றுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும், அவர்களது நன்னடத்தைகளைப் பாராட்டுவதும் முக்கியமானவையாகும். எப்போதும் ஆசிரியர், திறமையை வெளிகாட்டும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

இந்தவகையில்தான் நபி (ஸல்) அவர்கள், அழகாக அல்குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்த அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள்.

பொதுவாக ஸஹாபாக்கள் நல்ல விஷயங்களைச் செய்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களை நபியவர்கள் புகழ்ந்திருப்பதையும் பாராட்டியிருப்பதையும் வரலாற்றில் காணமுடிகின்றது. நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை 'இந்த உம் மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அபூபக்கர் (றழி) அவர்களை உம்மத்தினரில் அன்பானவர் என்றும், அலி (ரலி) அவர்களைச் சிறந்த நீதிபதியென்றும், ஸைதை வாரிசுரிமைச் சட்ட வல்லுநர் என்றும், முஆத் (ரலி) அவர்களை ஹலால் ஹராம் விடயங்களில் தேர்ந்தவர் என்றும் வர்ணித்துப் பாராட்டியுள்ளார்கள்.


இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆசிரியராக பல சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளார்கள். சமூகத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டுவர விரும்பும் அனைவருமே சிறந்த தலைவராக இருப்பதைவிட சிறந்த ஆசிரியராக இருப்பதே சாலச் சிறந்த்து.

No comments: