அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 9 February 2017

நுகர்வோர் உரிமை





நுகர்வோர் உரிமை பாதுகாப்பிற்கான உறுதியான அடித்தளம் ஒரு வியாபாரியின் நியாயமான தொழில் நடைமுறைகளின் மீது தான் எழுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இஸ்லாம் சொல்லுகிற வணிகத்தின் சிறப்புக் குறித்தும், வியாபாரியின் வணிக நடைமுறைகள் குறித்தும் சொல்வதே இப்பகுதியின் முக்கிய அம்சமாகும்.
‘தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட்கொடையைத் தேடிக் கொள்ளுங்கள்’ என இறைவன் கட்டளையிடுகிறான் (திருக்குர்ஆன் 62:10).
ஆக, இறை வணக்கத்தை நிறைவு செய்து விட்டதற்கு பின்பாக தமக்கான வாழ்வாதாரத்தை தேடிப் பெற்றுக் கொள்வதும் வணக்கத்தைப் போன்றே அவசியமான ஒன்றாகும்.
காரணம் வணிகம் செய்யும் முறை இறைவனால் நபிமார்களுக்கு போதிக்கப்பட்ட நன்மைக்குரிய காரியமாகும். ஆதம் நபி தொடங்கி நம் பெருமானார் (ஸல்) வரையில் நபிமார்கள் பலரும் பல வியாபாரங்களை செய்துள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வாசிகள் மற்றும் ஸஅது கிளையினரின் ஆடுகளை மேய்த்து அதற்கு பதிலாக தானியங்களை கூலியாக பெற்று வந்துள்ளார்கள். பின்பு சிறுபிராயத்தில் தன் சிறிய தந்தையுடன் வியாபாரம் நிமித்தமாக ஷாம் தேசத்திற்கு சென்றுள்ளார்கள். பின்பு தன் 25–வது வயதில் மக்காவின் செல்வ சீமாட்டியான அன்னை கதீஜா அவர்களின் வியாபர பொருளை சிரியாவிற்கு கொண்டு சென்று வணிகம் செய்து வந்துள்ளார்கள்.
நாயகத்தின் தொழில் நேர்மையும், உண்மையும் தான் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் நாயகத்தை மணமுடிக்க காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இஸ்லாத்தின் முதலாம் ஜனாதிபதி அபூபக்கர் அவர்கள் துணி வியாபாரம் செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்கள் பெரிய அளவிலான வியாபாரத்தை செய்து வந்தார்கள் என்பது வரலாறு.
ஆக வியாபாரம் செய்வதும், வியாபாரியாக இருப்பதும் நபிமார்கள் நல்லோர்களின் வாழ்வியல் வழி முறை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எது போன்ற வணிகத்தை செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? ஒரு இஸ்லாமிய வியாபாரிக்கான நிபந்தனைகள் என்ன? வியாபார கொடுக்கல் வாங்கலில் பேண வேண்டிய அவசியமான நடைமுறைகள் யாவை? வியாபார ஒழுக்க நடைமுறைகள் யாவை? என வியாபாரத்திற்கான தெளிவான சட்ட திட்டங்களை வரிசைப்படுத்திய உலகத்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
காரணம், எந்த வகையிலும் ஒரு நுகர்வோர் தனக்கான உரிமைகளை இழந்து, எந்த ஒரு சிறு பாதிப்பையும் அடைந்து விடக் கூடாது என நுகர்வோர் உரிமை பாதுகாப்பு விஷயத்தில் இஸ்லாம் சிறந்ததோர் முன்னோடியாக திகழ்வது நம்மை பிரமிக்கச் செய்கிறது.
வியாபாரிகளின் எந்த முறையில் வணிகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது தெரியுமா?:
1. அல்லாஹ்வை பயந்து, உண்மை பேசி, நேர்மையாக வணிகம் செய்த வியாபாரிகளை தவிர மற்றவர்கள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவார்கள் என பெருமானார் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
2. பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்கிற மனிதனை இறைவன் நாளை மறுமையில் பார்க்கவே மாட்டான் என்றார்கள் நாயகம்.
3. மோசடி செய்பவர் நம்மை சார்ந்தவர் அல்ல என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மோசடி செய்து வணிகம் செய்வது என்பது இஸ்லாமிய நடை
முறைக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றாகும்.
4. வியாபாரப் பொருளை பதுக்கி வைத்து வணிகம் செய்வது பாவிகளின் தன்மையாகும் என்றார்கள் நாயகம்.
5. வியாபாரிகள் மட்டுமல்ல, வணிகத்தில் ஒரு நுகர்வோர் பிரிதொரு நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பதும் கட்டாயமானது என இஸ்லாம் சொல்கிறது.
பொருளின் விலையை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பேரம் பேசி விலையை உயர்த்தி விடுவதை பெருமானார் (ஸல்) கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
மரணப்படுக்கையில் கிடந்த மஹ்கல் இப்னு யஸார் என்ற நபித்தோழர் தன் குடும்பத்தாரிடம் என்னை படுக்கையிலிருந்து அமர வையுங்கள். பெருமானார் (ஸல்)
அவர்கள் சொன்ன ஒரு விஷயங்களை நான் உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன் என்றார்கள்.
யார் ஒருவர் பேசிப் பேசி ஒரு பொருளின் விலை உயர்த்தி விடுவாரோ, அவரை நரகத்தில் நுழையச் செய்வது இறைவனின் மீது கட்டாயமாகி விடுகிறது என்ற பெருமானாரின் எச்சரிக்கையை அந்த நபிதோழர்கள் சொன்னார்கள்.
6. இன்றைய காலத்தில் மிளகில் பப்பாளி விதையை கலப்பது, மிளகாய் தூளில் செங்கல் தூளை சேர்ப்பது என கலப்படத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அளவையில் நிறுவையில் மோசடி செய்வது என்பது சகஜமாகி போன வணிகமாக இன்று மாறிவருகிறது. இது போன்ற வணிக நடைமுறைகள் அனைத்தும் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் நம்மை ஆளாக்கி விடும் என்பது நிதர்சனமான ஒன்றாகும்.
இறைவன் திருக்குர்ஆனின் 11–வது அத்தியாயத்தின் 84–வது வசனம் தொடங்கி 95–வது வசனம் வரை ‘மத்யன்’ என்ற ஊர்வாசிகள் அழிக்கப்பட்ட வரலாற்றின் பின்னணியை சொல்கிறார்.
மத்யன் என்பது ஹிஜாஸ் மாகாணத்திற்கும் ஷாம் தேசத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிறிய கிராமமாகும். மத்யனுக்கு ஷுஐப் என்ற நபியை இறைவன் அனுப்பினார்.
அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற ஏகத்துவத்தை அவ்வூர் மக்களுக்கு சொல்லி வைத்தார்கள். அத்தோடு அம்மக்கள் வியாபாரத்தின் அளத்தலில் நிறுவையில் மோசடி செய்பவர்களாகவும் இருந்தார்கள். ஷுஐப் நபி அது குறித்து வன்மையாக கண்டித்தார்கள். அத்தோடு உங்களின் வணிக முறை இறைவனின் கோபத்திற்கு உங்களை ஆளாக்கி விடும் எனவும் எச்சரித்தார்கள். என்றாலும் அந்த மக்கள் திருந்திய பாடில்லை.
என்னுடைய சமூகத்தினரே அளவையும் நிறுவையும் நீதத்துடன் நிறைவு செய்யுங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருட்களை நீங்கள் குறைக்காதீர்கள். பூமியின் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறி அலையாதீர்கள் என்றும்,
நீங்கள் மூமின்களாக இருந்தால் (அளவையிலும், நிறுவையிலும் நீதமாக நடந்துக் கொண்ட பின்னர் உங்களுக்கு) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையானதாகும் என ஷுஐப் நபி எச்சரிக்கிறார்கள், (திருக்குர்ஆன் 11: 84, 85)
எங்கள் வியாபார பொருளில் நாங்கள் விரும்பியதைச் செய்வோம். நீர் சொல்வது ஏதும் சரியாக புரிவதிற்கில்லை என கேலி செய்து விடுகிறார்கள்.
இறுதியாக என்னுடைய சமூகத்தினரே நீங்கள் உங்கள் நிலையிலேயே (செயல்களை) செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக நானும் (என் செயலை) செய்து கொண்டிருக்கிறேன். எவருக்கு இழிவு தரும் வேதனை வரும்? யார் பொய்யர்? விரைவில் அறிந்து கொள்வீர்கள் (திருக்குர்ஆன் 11:93) எனச் சொல்லி நபி ஷுஐப் அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அதன் படியே இறைவன் மத்யன் மக்களை பேரிடி முழுக்கத்தால் அழித்து விடுகிறான். அநியாயக்காரர்கள் தங்கள் வீடுகளில் குப்புற வீழ்ந்து இறந்துப் போனார்கள் என்பது திருக்குர்ஆன் நமக்கு சொல்கிற சிறிய நிகழ்ச்சியாகும்.
நேர்மையான வியாபாரியின் உயர்வும், நுகர்வோர் உரிமை பாதுகாப்பும்:
நேர்மையான வியாபாரி நாளை மறுமையில் நபிமார்கள், இறை நேசர்கள், இறை வழியில் வீர மரணமடைந்த தியாகி களுடன் இருப்பார் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
எந்த கஷ்டமும் சிரமும் இன்றி தன் வணிக நடைமுறையில் மட்டும் உண்மை பேசி நேர்மையாக இருக்கிற வியாபாரிக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உயர்வான அந்தஸ்தை விளங்கிக் கொள்வது ஒரு புறம்.
அதே நேரத்தில் அதன் மறுபுறம் ஒரு வியாபாரியின் நேர்மையில் நுகர்வோரின் உரிமை பாதுகாப்பும் அடங்கி இருக்கிறது என்பதையும் நாம் தெளிவாக விளங்கியாக வேண்டும்.

No comments: