அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 2 February 2017

மனஅமைதி


இன்றைய அதிநவீன, வேகம் நிறைந்த பரபரப்பான உலகின் பெரும்பாலான நபர்களை ஆட்கொண்டிருக்கிற வியாதி என்ன தெரியுமா?
மனஅழுத்தம், மன இறுக்கம் போன்றவை தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
நம் முன்னோர்கள் அனைவரும் குறைவான வசதிகளுடன் இருந்த போதிலும் நிறைவாகவே வாழ்ந்தார்கள்.
ஆனால்...? நாமோ இன்று ஏர்கண்டிஷன், குளிர்சாதன பெட்டி, மாவு அரைக்க, துணி துவைக்க எந்திரம் என வசதி வாய்ப்போடு, சகலத்திலும் சவுகரியமாக இருக்கிற போதிலும் மனக்குறைவோடு தான் வாழ்கிறோம்.
கிழிசல்கள் நிறைந்த உடையை மறைக்க 15 இடங்களில் ஒட்டுகள் போட்ட ஆடை அணிந்திருந்தார் உமர் (ரலி) அவர்கள். அவ்வளவு எளிமையாக வாழ்ந்த அவர்களின் கீழ் ரோம் மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்கள் அடிபணிந்தது எவ்வாறு?.
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியாக இருந்த போதும் சவுக்கைச் சுருட்டி அதையே தலையணையாய்த் தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, மரத்தின் நிழலில் நிம்மதியாய் தூங்கியவர் உமர் (ரலி). ஜனாதிபதியாக இருந்தபோதிலும், எந்த பாதுகாப்பும் இன்றி மரத்தடியில் உறங்கிய அவர்களின் தூக்கத்தை என்ன வென்று சொல்வது?
இன்று நாமோ பஞ்சு மெத்தையில் படுத்த போதும் நிம்மதியாய் உறங்கிய பாடில்லை. ஆழ்நிலை தூக்கம் என்பது களவு போன ஒன்றாகி விட்டது இன்று.
இது ஏன்? இதற்கு காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி? இதற்கு எளிதில் தீர்வு காண முடியுமா?
நம்மில் பலர் தொலைத்த இடத்தை விட்டு விட்டு வேறு திசையில் ‘நிம்மதியை’ தேடி அலைகிறோம்.
மனித சரீரம் இரு பாகங்களால் படைக்கப்பட்டது. ஒன்று உடல். இரண்டு உள்ளம். நம்மின் உடல் நலமும், மன மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. இணைபிரியாதவை. ஆனாலும், உடற் சோர்வால் ஏற்படுகிற பாதிப்பை விட உள்ளச் சோர்வால் ஏற்படுகிற பாதிப்புகளின் தாக்கம் அதிகமானதாகும்.
அதனால் தான் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், ‘உங்களின் உடலில் ஒரு சதைத் துண்டு உண்டு. அது சரியாக இருந்தால் முழு உடலும் சரியாக இருக்கும். அது கெட்டுப் போனால் முழு உடலும் கெட்டுப்போகும். அதுதான் உள்ளம்’ என்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
உடல் நோயை ஓரளவு மருந்து மாத்திரைகள் வைத்து குணப்படுத்தி விடலாம். ஆனால் மனநோயை எப்படி குணப்படுத்துவது? மனநோய்க்கான அருட்பெரும் மருந்து ‘மன அமைதியே’.
இந்த மனஅமைதியும், நிம்மதியும் இறை வணக்கத்திலும், இறை சிந்தனையிலும் தான் நாம் பெற்றாக வேண்டும். வேறு எங்கும் எதிலும் சாத்தியமல்ல என்பதே இறைவனின் கூற்றாகும்.
‘அவன் தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ஸகீனத்தை (நிம்மதியை) இறக்கி அருளினான். அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமாக நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக’ என்கிறது திருக்குர்ஆன். (48:4)
‘(இறைவிசுவாசிகள்) எத்தகையோர் என்றால் அவர்கள் (மெய்யாகவே) விசுவாசம் கொண்டார்கள். இன்னும் அல்லாஹ்வை நினைவுகூர்வதைக் கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக’. (திருக்குர்ஆன்: 13–28)
மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதே போன்று வாழ்வில் இறை சிந்தனையோடு இருப்பதும் நம் உள்ளத்திற்கு இன்றியமையாததாகும். நீரை விட்டு மீன் வெளிவந்து விட்டால் மீனின் பரிதாப நிலை நாம் அறிந்தது தான். அதே போன்று தான் இறை சிந்தனை மறந்த உள்ளத்தின் நிலையும் என்கிறார்கள் இமாம்கள்.
இறை வணக்கத்தின் வழியாக கிடைக்கிற நிம்மதியை கோடிகள் கொடுத்தாலும் யாரும் தந்துவிடமுடியாது. காரணம் நிம்மதி என்பது இறைவனின் பெறுதற்கரிய பாக்கியமாகும்.
பெருமானாரும், நபித் தோழர்களும் எவ்வளவு ஏழ்மையில் இருந்த போதிலும் கூட நிம்மதியுடனும், நிறைவான ஆனந்தத்துடனும் இருந்தார்கள் என்பதை சரித்திரத்தில் நாம் வாசிக்க முடிகிறது. ‘இறை வணக்கத்தில் அவர்கள் கொண்டிருந்த தீவிர ஈடுபாடே’ இதன் மூலக்காரணமாகும்.
நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் கவலை ஏற்படுத்துமானால் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? கவலைப்பட்டு அமர்ந்திருக்க மாட்டார்கள். மாறாக, தொழுவதற்காக பள்ளியின் பக்கம் விரைந்து செல்வார்கள்.
பள்ளிக்கு சென்று ‘பிலாலே, தொழுகைக்காக அழைப்பு விடுங்கள். காரணம், தொழுகையின் மூலமே நாங்கள் மன நிம்மதியை பெறுகிறோம்’ எனச் சொல்வார்கள்.
இன்றைய மனஅழுத்தத்திற்கு பெருமானாரின் வழி மட்டுமே சிறந்ததோர் தீர்வாகும்.
அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) தொழுகையை என்னவென்று சொல்வது. அவர்கள் தொழுகைக்காக நின்றால் மன ஓர்மையோடு நிற்பார்கள். சிறிதும் ஆடாமல் அசையாமல் ஒரு சுவரைப் போல் நிலையாக நிற்பார்கள்.
அவர்கள் ருகூவிற்காக குனிந்தாலே அல்லது ஸஜ்தாவிற்காக பூமியில் சிரம் பணிந்தாலோ, சிட்டுக்குருவி கள் தன் கூட்டில் இருப்பதை போன்று அவர்களின் முதுகின் மீது துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும்.
இப்படி ஒருநாள் அவர் உள்ளச்சத்தோடு ஓர்மையாக தொழுது கொண்டிருந்த போது, அன்றைய காலத்தில் பீரங்கியாக பயன்படுத்தப்பட்ட ‘மின்ஜனீக்’ என்ற கருவியில் இருந்து பாய்ந்து வந்த கல் அவர்களின் தாடியின் வழியாக சென்று நெஞ்சைத் தாக்கியது. அல்லாஹ் அக்பர்.
இதுகுறித்து அபூ முலைகா என்பவர், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) மீது கல் பாய்ந்த போது அவரது உடலில் சிறு அசைவும் ஏற்படவில்லை. இதனால் அவர் தனது தொழுகையை நிறுத்திவிடவும் இல்லை’ என கலீபா உமர் இப்னு அப்துல் அஜிஸ் அவர்களிடம் ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள், உண்மை தான்.
நபித்தோழர்கள் ஏழ்மையிலும், வறுமையிலும், சிரமத்திலும் இருந்த போதும் கூட அவர்களுக்கு மன அழுத்தமோ, மன இறுக்கமோ ஏற்படவில்லை. காரணம், ‘எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான்’ என்கிற அதீத நம்பிக்கை மிகைத்து இருந்தது. இரவு பகலாக வணக்கம் புரிவதில் ஆர்வத்தோடு திளைத்திருந்தார்கள்.
ஆனால்...? நாமோ காசு, பணத்தை, மாட மாளிகைகளை சாம்பதிக்கிற நோக்கில் ஐங்காலத் தொழுகையை, குர்ஆன் ஓதுவதை, இன்னபிற வணக்க வழிபாடுகளை தொலைத்து விட்டு, நிழலில் நிஜத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மிடமிருந்து நிம்மதியும் தொலைந்து போனது என்பதில் சந்தேகமில்லை.
அதே போன்று மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய மற்றொரு விஷயம் அடுத்தவரின் வளர்ச்சியின் மீதும், காசு பணத்தின் மீதும் நாம் கொள்கிற பேராசையும், பொறாமையும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
ஆனால் நபித்தோழர்களோ பணம் வந்த போது பயந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் மதீனாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார்கள்.
ஒரு நாள் நோன்பு திறப்பதற்கு அவர்களின் முன் உணவுகள் வைக்கப்பட்டன. அதை பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
‘முஸ்அப் இப்னு உமைர் என்னை விட சிறந்தவர். ஆனால் அவரின் மரணித்த உடலை மூடுவதற்குசரியான துணி கிடைக்கவில்லையே. தலைக்கு இழுத்தால் கால் தெரிந்தது. காலுக்கு இழுத்தால் தலை தெரிந்தது’ என சொல்லிக் கொண்டு மீண்டும் அழுதார்கள்.
நபித்தோழர்கள் எந்த அளவுக்கு பணத்திற்கு அடிமையாகாமல் பயத்துடன் இருந்தார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.
இறைவன், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் வாரி வழங்கியபோது, ‘செய்த நன்மைகளுக்கு பிரதியை இறைவன் உலகத்திலேயே முன்கூட்டியே தந்துவிட்டானோ என நான் அஞ்சுகிறேன்’ என அப்துர் ரஹ்மான் அவ்ப் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நபித்தோழர்கள் தங்களிடம் குவிந்த காசும், பணமும் கானல் நீராகத் தான் அவர்களுக்குத் தென்பட்டது. அது எந்த விதத்திலும் இறை சிந்தனையையோ, மனநிம்மதியையோ குலைக்கவில்லை.
இன்றைய உலகத்தின் நவீனம் எந்த விதத்திலும் நமக்கு நிம்மதியை தரப்போவதில்லை. மாறாக இஸ்லாம் கற்றுத் தருகிற வாழ்வியலை நாம் கடைப்பிடிப்போம் எனில் நிச்சயம் மன அழுத்தமோ, மன இறுக்கமோ ஏற்படாது என்பதை உணர்வோமாக.

No comments: