அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 26 January 2017

மனித உரிமையை காக்க வேண்டியவர்களே அதை மீறலாமா?


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நிரந்தர சட்டம் வேண்டுமென்று, சென்னை மெரீனாவில் சுமார் 200 மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட போராட்டம், நாளுக்கு நாள் அதிகமாகி லட்சக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டார்கள். போராட்டம் மிகவும் திட்டமிட்டு நடக்கப்பட்டதால் உலகமே இந்த அறவழிப் போராட்டத்தைப் பற்றி சிலாகித்தது.
எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. வன்முறையும் ஏற்படவில்லை. மாற்றமாக இளைஞர்கள் தானே முன்வந்து எல்லா காரியங்களையும் எடுத்து செய்தார்கள். இப்போராட்டத்தின் மூலம் யாருக்கும் எந்தவித தொந்தரவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மிகச் சிறப்பான சேவைகளை செய்தார்கள். இதன் விளைவு குழந்தை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறைக்கே நண்பர்களாய் மாறிப்போனார்கள். போராட்டத்திற்கு வந்தவர்களை எப்படி கவனித்தார்களோ அதே போன்று காவல் துறையையும் கவனித்துக் கொண்டார்கள் இந்த இளைஞர்கள். அவர்களுடைய வேலைகளை இவர்கள் எடுத்து செய்தார்கள். அதனால் ஒரு அறவழிப் போராட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதை உலகத்திற்கே கற்றுக் கொடுத்தார்கள் நம் தமிழக மக்கள்.
சாதி மத பேதமின்றி தமிழர் என்ற ஒற்றை இனத்திற்காக அனைவரும் களத்திற்கு வந்தார்கள். மிகச் சிறப்பாக நடந்தது போராட்டம். ஒரு இனத்தின் அடையாளத்தையே அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் போது அந்த அதிகார வர்க்கத்தின் இன்ன பிற அரசியல் அநியாயங்களை பேசாமல் இருக்க முடியுமா? அதையும் பேசினார்கள். இதுவரை அதிகாரவர்க்கம் செய்த துரோகங்களை பட்டியலிட்டு அதற்கு எதிராக முழங்கினார்கள்.
ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத மத வெறி பிடித்த அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் இதை சீர்குலைக்க முடியுமோ அப்படியெல்லாம் முயற்சித்தார்கள். வழக்கம் போல் மதத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சிண்டு முடிச்சு போடும் வேலையை ஊடகத்தில் பேட்டி கொடுப்பதன் மூலம் பார்த்தார்கள். ஆனால் அதற்கும் இடம் கொடுக்கவில்லை நம் இளைஞர் பட்டாளம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீ உன் வேலையை பார்த்து போ என்று முகத்தில் அறைந்தார் போல் மீம்ஸ்கள் மூலமாகவும், காணொளி மூலமாகவும் பதிலடி கொடுத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத அரசியல் கை கூலிகள் கடைசியில் எடுத்த ஆயுதம் தான் காவல் துறை.
அவசரச் சட்டத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட இளைஞர்கள், நிரந்தரச் சட்டம் கேட்டு தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டத்திற்கு நிகரானதாக இருந்தாலும் அரசுத் தரப்பிலிருந்து யாரும் இந்த விளக்கத்தை கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் முதலமையச்சர் அவர் தரப்பிலிருந்து யாரையாவது அனுப்பியிருக்கலாம். ஆனால் யாரும் வரவில்லை.
திடீரென திங்கட்கிழமை காலை 4 மணியளவில் நூற்றுக்கணக்கான காவலர்கள் ஒன்றுகூடி பீதியை கிளப்புகிறார்கள். பின்பு போராட்டத்தை நிறுத்தி கூட்டத்தை கலையச் சொல்கிறார்கள். இளைஞர்கள் தரப்பிலிருந்து மிகவும் கண்ணியமாக குறைந்தபட்சம் 2 மணிநேரம் அவகாசம் கேட்கிறார்கள். அனுமதி மறுக்கப்படுகிறது. குண்டுக்கட்டாக இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பெண்கள் இழுத்து தள்ளப்படுகிறார்கள். பாதி இளைஞர்கள் கடலை நோக்கி ஓடிச் சென்று போராட்டத்தை தொடர்கிறார்கள். இதுவரை இளைஞர்கள் வன்முறையில் இறங்கவில்லை.
9 மணிக்குமேல் மெரீனாவிற்கு வெளியில் தான் வன்முறை ஆரம்பமாகிறது. பின்பு சமூக விரோதிகள் போராட்டத்தில் எப்படி இருக்க முடியும். வேண்டுமென்றே காவல்துறை வன்முறையை கிளப்புகிறது. தடியடி நடத்துகிறது. பொது மக்கள் கேட்கிறார்கள், மறியல் செய்கிறார்கள். காவல்துறை கை ஓங்குகிறது. காவல்துறை சூறையாடுகிறது. ஆங்காங்கே ஆட்டோக்கள், குடிசைகள், வாகனங்களில் தீ மூட்டுகிறது. வன்முறையை வேண்டுமென்றே உருவாக்கியது காவல்துறை. தமிழகம் போர்க்களமானது.
காவல் துறை மக்களுக்காக இயங்க வேண்டிய ஒன்று. மக்கள் பக்கம் நின்று மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். ஆனால் காவல்துறையே மக்களை சூரையாடினால்? மனித உரிமையை பேணி நடக்க வேண்டியவர்கள், மனித உரிமையை மீறுகிறார்கள்.
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதனை அதிகமான மனிதர்கள் சரியாக அறிந்து கொள்ளவில்லை. முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமன்றி முஸ்லிம்களில் சிலரும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவுகள் தான் இன்று உலகத்தில் காணப்படும் மனிதப் பேரவலத்தின் அடிப்படையாகவுள்ளது. எனவே இக்கட்டுரை முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம்களும் வாசித்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் இங்கு தரப்படுகிறது.
இறைவன் இப்பேரண்டத்தின் நிகரற்ற தனித் தலைவனாக. பேரதிபதியாக இருக்கின்றபடியால் அவனே அரசாண்மை மிக்கவன் பாதுகாவலன் புரவலன் கருனையாளன் அவனே அனைவரையும் படைத்துள்ளான். அவனின் கருணையைக் கொணடே அனைத்து உயிர்களும் ஜீவிக்கின்றன. மேலும் அவனே அனைத்து உயிர்களுக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளான் இந்த யதார்த்த உண்மைகள் என்ன உணர்த்துகின்றன? மனிதர்கள் தம்முடைய தன்மைகளில் எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் ஒன்றிணையலாம். அவனைக் கொண்டே தங்களிடையே சமத்துவத்தையும் நிலைநாட்டலாம். அவர்களிடம் மேலோட்டமாக பல வேற்றுமைகள் தென்பட்டாலும் இன,நிற,மொழி அடிப்படையில் பிரதேச அடிப்படையில் பல வேறுபாடுகள் இருந்தாலும். அவை அடிப்படையானவை இல்லை. மனிதர்கள் அனைவரும் ஏக இறைவனின் படைப்பினங்கள் எனும் வகையில் அவற்றை களையலாம். இவ்வாறு கருணைமிக்க ஒரே இறைவனுக்கு அஞ்சிப் பணிகின்ற காரணத்தால் மனிதர்கள் அனைவரும் சகோதர்களே! இது ஒரு பாரபட்சமற்ற சாந்தி மிகுந்த சூழலாகும். இந்த சூழலில் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையான ஓர்றைக் கொள்கை மேலோங்கிமைய அச்சாக விளங்குவதால் மனிதகுலம் முழவதும் சகோதரத்துவ அடிப்படையில் ஒன்றாக இருப்பதும் அவசியமாகிவிடுகின்றது.
இறைவன் ஓருவனே என்னும்போது மனிதர்கள் அனைவரும் அவனது படைப்புகளே என்பதும் தெளிவாகிறது. உலகில் ஏதாவதொரு பாகத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைகிற வாய்ப்பு இருந்தாலும் பூகோள அடிப்படையில் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே மனித உரிமைகள் மாண்புகள் பேணப்படவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கவில்லை. இஸ்லாம் அளித்திருக்கும் மானிட உரிமைகள் உலகளாவியவை மனிதகுலம் முழவதற்கும் பொருந்தக் கூடியவை. அந்த உரிமைகள் ஒரு மனிதன் இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி . அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி போரிட்டாலும்சரி எந்த நிலைமையானாலும் கடைபிடிக்கப்பட வேண்டியவையே !.
அல் குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவொராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப்பொருத்தமானது” (5:8)
மனித இரத்தம் புனிதமானது எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக் கூடாது. இந்த சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழவதையும் கொலை செய்தவரைப் போன்றாவார்.
அல் குர்ஆன் கூறுகிறது :
‘பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவஅல் குர்ஆன் (இறந்தவஅல் குர்ஆன் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித இனம் முழுவதையுமே கொன்றவஅல் குர்ஆன் போலாவாஅல் குர்ஆன் “. (5:32)
பெண்கள் மழலைகள் வயது முதிர்ந்தோர் நோயாளிகள் காயடைந்தோர் ஆகியோரை கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும் கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். எதிர்களாய் இருந்தாலும் சரி இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் வறியவர்கள் காயமடைந்தோர் பாதிக்கப்பட்டோர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ சட்டமன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்டமன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரி களின் அரசாணையும இவ்வாறு மாற்றப்படக்கூடியதே! ஆவர்களுக்கு ஒத்துவரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கிவிடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ திருத்தவோ உலகில் எந்த சட்டமன்றத்திற்கும். அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றை திரும்பப் பெறவோ மீறவோ மாற்றவோ அதிகாரமில்லை.
வெற்றுத்தாளில் எழுதி வீண் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் உதவாக்கரை ஆவணங்களல்ல அவை. வெளிச்சம் போட்டுக்காட்டிய பின் நடைமுறை வாழ்வில் அமுல்படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை. உருப்படாத தத்துவங்கள் அல்ல அவை. அமுல்படுத்துவதற்க்கு இசைவானை இல்லாத வறட்டுக்கொள்கைகள் அல்ல அவை.
ஐக்கிய நாட்டுப் போரவை அதனுடைய பிரகடனம் அது எடுத்த தீர்மானம் வழங்கிய மனித உரிமைகள் இறைவன் அருளிய மனித உரிமைகளோடு ஒப்பிடக் கூடியவை அல்ல. ஏனெனில் இறைவன் வழங்கிய மனித வழங்கிய மனித உரிமைகள். இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்கமுடியா அங்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை முஸ்லிம் என வாதிடும் ஆட்சியாளனும் இவற்றைக் கண்டிப்பாக ஒப்புக்கொண்டு. அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இறைவன் வழங்கிய இவ் விரிமைகளை மாற்றினாலே திருத்தினாலோஇமறுத்தாலோ வெறும் வாய்வேதாந்தம் பேசினாலோ அமுல்படுத்தத் தவறினாலோ அல் குர்ஆன் எச்சரிப்பதைப் பாருங்கள்.
‘எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தாம் நிராகர்ப்பாளர்கள்” (5:44)
1. உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:
இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி(ஸல்) கூறினார்கள்: (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை உயிரை பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக்கூட நுகர முடியாது.
2. மனித மாண்பின் பாதுகாப்பு:
அல் குர்ஆன் கூறுகிறது:
1. ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.
2. அவதூறு கற்பிக்காதீர்
3. பட்டப்பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்.
4. புறங்கூறாதீர் தரக்குறைவாக பேசாதீர்.
3. தனிநபர் வாழ்வும் புனிதமும்:
1. உளவு பார்க்காதீர்
2. உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்
4. தனிநபர் சுதந்திரம் :
எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமாத வரைஅவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஒருவரைப் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
5. கொடுங்கோன்மைக்கு எதிரான பாதுகாப்பு:
இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் ஒன்று அரசுக் கொடுங்கோன்மைக் கொதிரான பாதுகாப்பாகும்.
அல் குர்ஆன் கூறுகிறது:
தீங்கான சொற்களை வெளிப்படையாக போசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர் பேசலாம் (4:148)
இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. மனிதனுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே! அடைக்கலமாக அளிக்கப்பட்ட அதிகாரமே ஆகும். இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர் மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தி அபூ பக்ர்(ரலி) அவர்கள் பதவியேற்ற பின் தம்முடைய முதல் உரையில் கூறுகிறார்.
நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள். நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். இறைவனின்-இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழிதவறி நடந்தால் எனக்கு கீழ்ப்படிய வேணடாம்.
6. கருத்துச் சுதந்தரம்:
குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்தரத்திற்கு இஸ்லாம் முழு உத்திரவாதமளிக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை. ஓழுக்க மேம்பாட்டிற்கும் வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங்கோன்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலாகாது.
கருத்துச் சுதந்தரம் பற்றி மேலைநாட்டினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தைவிட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்தரம் சிறப்பானது. ஏந்தக் காரணத்தாலும் தீமைகள் அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி தாக்குதல் அத்துமீறல்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இறையானை ஏதேனும் உள்ளதா என்று முஸ்லிம்கள் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை விசாரிப்பது வழக்கம். அப்படி இறைக்கட்டளை எதுவும் வெளியாகவில்லை என்று கூறினால் முஸ்லிம்கள் வெளிப்படையாக மனம்விட்டு தத்தமது கருத்துக்களைக் கூறுவார்கள்.
7. கூடிவாழும் உரிமை
இந்த உரிமையும் ஒரு சில பொதுநல விதிகளுக்குட்பட்டு மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும்.
8. தீர்மானிக்கும் உரிமை
இஸ்லாம் கூறுகிறது.
‘இறைமார்க்கத்தில் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை’ (2.256)
சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இல்லை. அரசுக்கு அளிக்கப்படும் வரையற்ற அதிகாரங்கள் மனித அடிமைத்தனத்தையும் கீழ்மையையும் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை உலகில் அமுலில் இருந்தது. இப்பொழுது அத்தகைய அடிமை முறை சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வாதிகார சமூக அமைப்பு விதித்துள்ளதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.
9. சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு:
சுயாதீனமான உரிமை மற்றும் கருத்துச் சுதந்தரத்தை இஸ்லாம் விலியுறுத்துகிற நேரத்தில் தனிநபரின் சமய உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவற வில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் கூடாது. எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
10. தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு.
வேறொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
அல் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
ஓருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்கமாட்டார்கள் (16:164)
11. வாழ்வாதார அடிப்படைக்கான உரிமை:
தேவையுள்ளோருக்கும் வறியோருக்கும் உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும்.
இறைவன் கட்டளையிடுகிறான்.
அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கு தேவையுளோருக்கும் உரிமையுண்டு. (70:15)
12. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.
13. ஆட்சியாளர் விதிவிலக்கல்ல.
ஓர் உயர்ந்த வம்சத்து பெண் திருட்டுக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள் அந்த வழக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முன் கொண்டுவரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். செய்தனர். அப்பொழுது முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக்குடிமக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்கவிடுவார்கள். என் உயிர் யார் கைவசம் உள்ளதோ. அந்த அல்லாஹ் வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் பாத்திமா இதே தவறை செய்தாலும் நான் அவர் கையை துண்டிக்காமல் விடமாட்டேன்.
14. அரசியன் விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமை.
அவர்கள் பணிகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை மூலமாகவே(நடைபெறும்) (42:38)
ஆலோசனை சபை அல்லது சட்டமன்றம் என்பதன் கருத்து இதுதான்.
சட்டபூர்வ பாதுகாப்பினை நல்கி மேற்கூறிய மனித உரிமைகளைச் சாதிப்பதில் இஸ்லாம் நாட்டம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல மிருக இயல் புகளைவிட்டு வெளியேறி மனிதமாண்புகளை மேற்கொள்ளவேண்டும். இரத்தபந்தம் இனமேன்மை மொழி வெறி பொருளாதார மேலுரிமை போன்ற குறுகிய வட்டங்களை விட்டு பரந்த நோக்கின்பால் வரவேண்டும். அந்தரங்க சத்தியோடு சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ வேண்டும் என இஸ்லாம் மனிதகுலத்திற்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறது
திட்டமிட்டு காவல்துறை மனித உரிமை மீறியதால், மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். காவல்துறை இந்த வன்முறையில் இறங்கியதற்கு காரணம்,
மீண்டுமொரு முறை இவ்வளவு தைரியத்தோடு யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று அச்சுறுத்துவதற்காகவே. 
ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அடக்குமுறைகள் இருக்கும் வரை அதை எதிர்க்கும் குரல்கள் ஓங்கிக் கொண்டே இருக்கும். இன்னும் போராட்டங்கள் தொடரும்.

No comments: