அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 1 October 2015

ஊடக ஒழுக்கம்



இஸ்லாம் முழு மனித சமுதாயத்துக்கும் வழிகாட்டல்களைக் கொண்டுள்ள மார்க்கம். அது ஊடகவியல் துறைசார்ந்தோருக்கு மிகச் சரியான வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. அந்த வகையில் இஸ்லாம் சொல்லுகின்ற தொடர்பூடக ஒழுக்கவியல் கோட்பாடுகள் பற்றிய அடிப்படையான சில குறிப்புகளை இங்கே தருகிறம். இவை இன்னும் ஆழமாக ஆராயப்பட்டு, மெருகூட்டப்பட்டு ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் ஷஇஸ்லாமிய ஊடக ஒழுக்கக் கோவை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.

உலகில் ஊடகத்துறை எப்போது துவங்கப்பட்டதோ அன்று முதல் ஊடவியலுக்கான ஒழுக்கங்கள் (Ethics) பற்றியும் பேசப்பட்டே வந்துள்ளது.

15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பத்திரிகைத்துறை ஆரம்பமானது முதல் அத்துறைக்கான உரிமைகள், கடமைகள், ஒழுக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டிலேயே இத்துறைக்கான பொதுவான ஒழுக்கவியல் கோவை வகுக்கப்பட்டது. 1926 இல் Plan American Press  எனும் அமைப்பு ஒழுக்கவியல் கோவை ஒன்றை உருவாக்கியது. 1950 இல் Inter American Press எனும் அமைப்பு இது தொடர்பான மற்றுமொரு முன்மொழிவை முன்வைத்தது. 1952 இல் ஐ.நா.சபை இதழியல்துறை தொடர்பான ஓர் ஒழுக்கவியல் சட்டக்கோவை குறித்து ஓர் ஆய்வை நடத்தியது. 1954 இல் ஐ.நா.சபை இது தொடர்பில் சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது சிக்கலானது எனக் கூறியது. 1974 ஷஇல் ஐரோப்பிய சமூகப் பத்திரிகைகள் வர்த்தக சங்கம்| எனும் அமைப்பு ஓர் ஒழுக்கக் கோவையை அறிமுகம் செய்தது. இதே காலப்பிரிவில் சர்வதேசப் பத்திரிகை அமைப்பு இது தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தியது.
1977 இல் அரபுப் பத்திரிகைகளுக்கான ஒழுக்கவியல் பிரமாணங்கள் தயாரிக்கப்பட்டன. அவ் ஒழுக்கவியல் கோவை இஸ்லாமிய அடிப்படைகளுக்கு அமைவாக இல்லாவிட்டாலும், மனித விழுமியங்கள் மற்றும் பொதுவான ஆன்மிக, தார்மிக ஒழுக்கப் பண்பாடுகளை கவனத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படி காலத்துக்கு காலம் இதழியல் துறைக்கான ஒழுக்கக் கோவைகள் வகுக்கப்பட்டபோதும் அவை வெறும் கோட்பாட்டளவில் மாத்திரமே இருக்கின்றன.



இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற மார்க்கம் என்ற வகையில் மீடியா துறைக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒழுக்கங்களை வகுத்துக் தந்திருக்கிறது. அவையாவன:

01.    உண்மையும் நம்பகத்தன்மையும் (Reality and Reliability)
வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் சந்தர்ப்பங்களிலும் உண்மை உரைப்பது, வாய்மையாக நடப்பது இஸ்லாத்தின் அடிப்படையான போதனை.
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் உண்மையாளர்களுடன் இருந்து கொள்ளுங்கள்". (ஸூரா அத்தவ்பா: 119)
உண்மை (அஸ்ஸித்க்), வாய்மை (அல்அமானத்) அகிய இரண்டும் இஸ்லாத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவை. இஸ்லாம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு கொள்கை என்பது தெளிவானது.
ஊடகவியலாளர்கள் பொய் சொல்வதை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, தகவல்களை அறிக்கையிடுவதனை பாரதூரமான ஒரு குற்றமாக நோக்க வேண்டும். இதுபற்றி அல்குர்ஆன் கடுமையான எச்சரிக்கையை விடுகின்றது.
"விசுவாசிகளே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் (அதனை உடனே அங்கீகரித்து) அறியாமையால் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாமலிருப்பதற்காக (தீர்க்கமாக விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின்) பின்னர் நீங்கள் செய்யாதவை பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்." (அலஹுஜுராத்: 06)
இந்த வசனம் ஒன்று மட்டுமே பொய்யான செய்திகளைப் பரப்புவதன் பாரதூரத்தை உணர்த்தப் போதுமானது. எந்தவொரு செய்தியும் தெளிவான ஆதாரம் இல்லாமல் சொல்லப்படக் கூடாது. அல்லாஹுத் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து இப்படிச் சொல்கின்றான்:
"(உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என (நபியே) நீர் கூறுவீராக". (அல்பகரா: 111)

02.    தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காதிருத்தல், பக்கசார்பின்றி செயற்படுதல்.
எந்தவொரு விடயத்தைச் செய்வதாயினும் அதில் சுய குறுக்கீடு அல்லது சமூக சார்பெண்ணம் செல்வாக்குச் செலுத்துவதை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.
"விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுபவர்களாக (உண்மையின் மீது நிலைத்தவர்களாக) ஆகிவிடுங்கள். எந்த சமூகத்தவர் மீதான விரோதமும் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களை திண்ணமாகத் தூண்டிவிட வேண்டாம். (எவ்வளவு விரோதம் இருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள் அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும்..." (அல்மாயிதா: 08)
"விசுவாசம் கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது) உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றNhருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்....." (அந்நிஸா: 135)

03.    பண்பாடு பேணுதல் (Decency)
மனிதனுடைய சுய கௌரவத்தைப் பேணிய நிலையில்தான் ஊடக செயற்பாடுகள் அமைய வேண்டும். பண்பாடு பேணுதல் எனும் ஒழுக்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் பல காணப்படுகின்றன. ஏசுதல், திட்டுதல், தூற்றுதல், இழிவுபடுத்தல், அவமானப்படுத்தல், உளவுபார்த்தல் முதலான அனைத்து பண்பாடற்ற செயற்பாடுகளும் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய ஊடகத்துறையை இவை போன்ற பண்பாடற்ற அணுகுமுறைகளே அலங்கரிக்கின்றன. இவை இல்லாவிட்டால் ஊடகத்துறையே இல்லை என்றளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
தனிமனிதர்களுக்கிடையிலான, சமூகங்களுக்கிடையிலான உறவுகளை முறித்து சமூகத்தைக் குட்டிச்சுவாராக்குகின்ற மாபெரும் சமூகத் தீமைகள், கெட்ட பண்புகள் பற்றி ஸூரதுல் ஹுஜுராத் விரிவாகப் பேசுகின்றது.
ஷஷவிசுவாசிகளே! ஒரு சமூகத்தினர் மற்றnhரு சமூகத்தினரை பரிகாசம் செய்ய வேண்டாம். (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) பரிகாசம் செய்யப்பட்ட அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களையும் விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறைகூறவும் வேண்டாம் உங்களில் சிலர் சிலரை அவர்களுக்கு வைக்கப்படாத பெயர்களால் அழைக்கவும் வேண்டாம் விசுவாசம் கொண்ட பின்னர் (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீய பெயர் (கூறுவது) மிகக் கெட்டதாகி விட்டது எவர்கள் (இவற்றிலிருந்து) தவ்பாச் செய்து மீளவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.
"விசுவாசிகளே! தவறான எண்ணத்தில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித் துருவி ஆராய வேண்டாம். உங்களில் சிலர் சிலரை புறம் பேசவும் வேண்டாம். உங்களில் ஒருவர், தனது சகோதரனின் மாமிசத்தை (அவர் இறந்து) சவமாகியிருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது நீங்கள் அதனை வெறுத்து விடுவீர்கள்....."(ஸூரா அலஹுஜுராத்: 11, 12)
ஊடகவியல் துறைக்கான மிகப் பெரிய ஒழுக்கக்கோவை ஸூரத்துல் ஹுஜுராத் என்று சொல்லலாம். சகல ஊடகவியலாளர்களுக்கும் ஸூரதுல் ஹுஜுராத் கற்பிக்கப்பட வேண்டும்.
பண்பாடு பேணுதல் எனும் அம்சத்தில் உள்ளடக்குகின்ற ஒன்றுதான் வார்த்தைகளில் நாகரிகம் பேணுதல். உதாரணமாக, பாலியல் வல்லுறவுடன் தொடர்புபட்ட ஒரு செய்தியை அறிக்கையிடும்போது ஆபாசமாக, விரசத்தைத் தூண்டும் வகையில் அதனை எழுதுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

04.    பொறுப்புணர்வு (Responsibility)
நாம் எழுதுகின்ற ஒவ்வொரு வாசகத்துக்கும் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டும். நாளை மஹ்ஷரில் கேட்கப்படும் நான்கு கேள்விகளுள் "உனது அறிவைக் கொண்டு என்ன செய்தாய்?" என்ற வினாவும் ஒன்று.
சிலபோது எமது கருத்துக்களும் ஆக்கங்களும் எம்மை நரகில் தள்ளி விடலாம். எனவே, பொறுப்புணர்வு மிக முக்கியமானது. பொறுப்புணர்வு (அமானத்) எனும் பண்பு ஒரு மனிதனிடத்தில் ஆழ வேரூன்றி விடுமானால் உலகமே சொர்க்கபுரியாக மாறி விடும். ஆனால், இன்று பலரிடம் பொறுப்புணர்வு எனும் பண்பு மருந்துக்கும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஊடகத்துறையில் பௌதிகப் பண்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அகப் பண்புகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. பௌதிக வாழ்வம்சங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆன்மிக வாழ்க்கைக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உள்ளத்துக்கு கொடுக்கப்படுவதில்லை. இது ஒரு தஜ்ஜாலிய்ய உலகம். தஜ்ஜாலுக்கு ஒரு கண் இருப்பது போலவே இன்றைய உலகத்துக்கும் புறக்கண் மாத்திரமே இருக்கிறது. அதற்கு அகக்கண் கிடையாது.
எனவே, இஸ்லாமிய வழிகாட்டல்களின் கீழ் அமைந்த பூரணமான ஊடக ஒழுக்கவியல் கோவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதன் நெறியாள்கையில் எமது ஊடகத்துறை விழுமியங்கள் மிக்கதாக மிளிர வேண்டும்.

No comments: