அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 October 2015

முஹர்ரம் - புதிய வருடப் பிறப்பு



புதிய வருட துவக்கம் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவது வழக்கம். சிலர் பட்டாசு வெடிப்பார்கள், சிலர் கேக் வெட்டி இனிப்புகளை பரிமாறுவார்கள். புதிய வருடத்தை எதிர்பார்த்து அதில் சந்தோஷமடையும் ஒவ்வொருவரும் கொஞ்சம் சென்ற வருடங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த வருடங்களில் நாம் என்ன செய்தோம்? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நமது மார்க்கம் நம் புதிய வருடத்தை கண்ணியமான மாத்த்தோடு தொடங்கி வைக்கிறது. அந்த மாத்தில் சில வழிபாடுகளையும் செய்யச் சொல்கிறது.

முஹர்ரம் 1437
உலக மக்களிடையே புது வருடப்பிறப்பு ஜனவரி மாதத்தின் முதல்நாள், பல்வேறு களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நவீன உலகில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசூஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் இருக்கின்றதைக் காண முடிகின்றது.

முஹர்ர்ரம்
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு விலக்கப்பட்டதுஎன்று பொருள்.

(பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது)

புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்
1. துல்கஃதா,
2. துல்ஹஜ்,

3. முஹர்ரம்,
4. ரஜப்

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36).
நிச்சயமாக வானங்கள் பூமிக்கு படைக்கப்பட்ட நாள் முதலே காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வரக்கூயவை. அவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ் ஸானி)வுக்கும் ஷஃபானுக்கும் மத்தியிலுள்ளதாகும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி). ஆதாரம்: புஹாரி).

அரபி மாதத்தின் முதல் மாதமான முஹர்ரம் என்ற மாதம் இது. இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் ஃபிர்அவ்னை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களை வெற்றி பெற செய்த நாள்தான் இந்த மாதத்தின் பிறை 10-ஆம் நாள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இந்த மாதத்தின் 10-ஆம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். அவர்களை கண்ட நபிகள் பெருமானார் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள் என்று வினாவினார்கள். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ஃபுர்அவ்னை வெற்றி பெற்ற இந்த நாளை நாங்கள் நன்றி சொல்லும் விதமாக நோன்பு நோற்று வருகிறோம் என்றும் சொன்னார்கள். அப்பொழுதுதான் நபி (ஸல்) சொன்னார்கள், மூஸா (அலை) அவர்கள் வெற்றி பெற்ற இந்த நாளுக்கு நன்றி சொல்வதற்க்கு உங்களைவிட நாங்களே உரிமையுடையவர்கள் என்று கூறிவிட்டு, அன்றைய தினத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியர்களை முஹரம் 10-ஆம் நாள் நோன்பு நோற்க சொன்னார்கள்.

ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக, இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை.இறைவனடி சேர்ந்தார்கள்.



நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த இந்த நோன்பைதான் ஆஷூரா நோன்பு என்று அழைக்கிறோம். முஹர்ரம் மாதத்தின் பிறை 9,10 அல்லது 10,11 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஒரு வருடகால பாவங்களை மன்னிப்பான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.



ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

இம்மாதத்தின் சிறப்பான ஆஷுராவுடைய நாளில்தான்,



1. ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் துஆ ஒப்பு கொள்ளப்பட்டது. 
2. ஹஸ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியது. 
3. ஆறுமாத கடலில் அலைக்கழிந்த பின்னர் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் கப்பல் ஜூதிமலையில் ஒதுங்கியது. 
4. ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் பிறந்ததும், அல்லாஹ் அவர்களை தன் கலீலாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்பு குண்டம் அவர்களுக்கு சுவனப் பூங்காவாக மலர்ந்ததும் அன்றேயாகும். 
5. ஹஸ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் பிழை பொறுக்கப்பட்டதும் இந்நாளிலே.
6. ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் இழந்த ஆட்சியை அன்றை தினமே மீண்டும் அடையப் பெற்றார்கள். 
7. சோதனை வயப்பட்ட ஹஸ்ரத் அய்யுப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் நோய் நீங்கி நலம் பெற்றதும் இன்றேதான். 
8. நைல் நதி பிளந்து பனீ இஸ்ராயீல்கள் தப்பி செல்ல வழிவிட்டு பிர்அவ்னை விழுங்க, அல்லாஹ் ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களுக்கு ஆஷுராவுடைய அந்த நாளிலேயே வெற்றியை தந்தான். 
9. கடும் இருட்டில், மீனின் வயிற்றில் 40 நாட்கள் கிடந்தது அழுது புலம்பிய ஹஸ்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் மீண்டும் வெளியானது ஆஷுராவுடைய நாளில் தான். 
10. கொலைகாரர்களிடம் இருந்து ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களை காப்பாற்றி அல்லாஹ் தன் பால் உயர்த்திக் கொண்டதும் ஆஷுராவுடைய நாளில்தான். 


புதிய வருடமும் முடிவெடுத்தலும்

புதிய வருடம் என்றாலே, பலர் பல முடிவுகளை எடுப்பது வழக்கம். இருந்தாலும் சிலரே அதில் வெற்றியடைகிறார்கள். ஒரு முடிவை எடுத்துவிட்டு முதலிரண்டு நாட்களோ அல்லது வாரங்களோ அதை கடைப்பிடித்துவிட்டு பின்பு அந்த முடிவை கைவிட்டுவிடுகிறார்கள். முடிவெடுப்பது மிகவும் எளிதானது. ஆனால் அதை கடைப்பிடிப்பதே கடினம். அதனால் முடிவெடுக்க வேண்டாம் என்பதல்ல. முடிவெடுங்கள் அதை தொடந்து செயல்படுத்தவும் கஷ்டப்படுங்கள். உலகில் முடிவெடுத்த விஷயங்களையெல்லாம் செய்லபடுத்த ஆரம்பித்துவிட்டாலே போதும் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த அமல்களானாலும் அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதே இறைவனிடத்தில் விருப்பமானது என்றார்கள்.

ஏகப்பட்ட முடிவுகளை எடுத்துவிட்டு அதை விட்டுவிடுவதைவிட ஓரிரு முடிவுகளை எடுத்து அதை தொடர்ச்சியாக செயல்படுத்துவதே உகந்த்து


1 comment:

Unknown said...

masha allah gd
y should we tell abt sheeya in those days and there deeds