அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 November 2012

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்


அல்லாஹ்வின் அலப்பெரும் அருளால் ஹிஜ்ரி 1434ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் அடியெடுத்து வைத்திருக்கிச்செய்கின்றான் அல்ஹம்துலில்லாஹ்.......
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த இஸ்லாமிய முஸ்லிம் சமுதாயம் இம்மண்ணிற்கு வந்து சுமார் 1433வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இதற்கு முன்பு அல்லாஹ் ஒருவனே இறைவன் என்று கூறி எத்தனையோ மார்க்கங்கள் தோன்றியிருந்தாலும், அவை அத்துனையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு நஞ்சுக்கருத்துக்களும், இட்டுக்கட்டுதல்களும் தினிக்கப்பட்டு மாற்றப்பட்டும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அதே சமயம் இஸ்லாமிய மார்க்கம் இன்று வரை வெற்றிக்களிப்போடு உலகெங்கிலும் சுமார் 130கோடி முஸ்லீம்களை பெற்று பீடுநடைப்போட்டு வருகிறது. இந்த இமாலய வெற்றிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போர்கால நடவடிக்கைகள்தான் காரணம். அதில் குறிப்பிடத்தக்கது ஹிஜ்ரத்.
ஹிஜ்ரத் இஸ்லாமிய சமுதாயத்தின் திருப்புனை.
ஹிஜ்ரத் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்ட சரித்திரச் சான்று.
ஹிஜ்ரத் ஈமானை வித்திடும் வித்துக்கள்.
ஹிஜ்ரத் கஷ்டங்களும் சோதனைகளும் நிரம்பிய பயணம் மட்டுமல்ல அது வெற்றிகளையும், சாதனைகளையும் உள்ளடக்கிய ஒரு வெற்றிப் பயணமும்கூட.
ஹிஜ்ரத் திரும்பத் திரும்ப நினைத்துப்பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஹிஜ்ரத் வரலாறு   கண்டிடாத மாபெரும்புரட்சி......                          எனவே தான் வைராக்கியம் நிறைந்த அரேபியர்களும் கூட ஒவ்வொரு வருடத்திலும் நிகழ்கின்ற முக்கிய நிகழ்சிகளை அந்த ஆண்டின் பெயராகவே சூட்டிவந்தபோதும் ஒரு கட்டத்தில் அதனை விடுத்து ஹிஜ்ரத்தை மட்டும் கணக்கில் வைத்து வருடத்தின் கணக்கை எண்ண ஆரம்பித்தார்கள் என்ற சரித்திரக் குறிப்பை எண்ணிப்பார்கிற போது ஹிஜ்ரத்தின் முக்கியத்துவத்தையும், அருமை பெருமைகளையும் நம்மால் விளங்க முடிகின்றது.  

   ஹிஜ்ரி தோன்றிய வரலாறு

கலீபா உமர் (ரலி) அவர்களை அபுமூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் கடிதப் போக்குவரத்தால் தொடர்பு கொள்கின்ற ஒரு சூழலில், அக்கடித்தில் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கேள்வியினை எழுப்பியிருந்தார்கள். அந்தக் கேள்வியின் விளைவாக தோன்றியதே இஸ்லாமிய ஹிஜ்ரி வருடக்கணக்கு. உடனே உமர் (ரலி) அவர்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, வருடத்தின் கணக்கினை எதை வைத்து தொடங்கலாம் என்ற ஆலோசனை கேட்கப்பட்டபோது, ஒருவர் நாம் நபியின் பிறப்பை வைத்து கணிக்கிடலாம் என்று கூறினார், பிறகு ஒரு மனிதர் எழுந்தார் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக இவ்வுலகிற்கு அனுப்பட்ட நாளிலிருந்து கணக்கை தொடங்குவோம் என்று கூறினார். இப்படி பல ஆலோசனைகள் கூறப்பட்டாலும் இறுதியாக ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் கருத்தான ஹிஜ்ரத்தை கணக்கிட்டு தொடங்குவோம் என்ற கருத்து ஏற்கப்பட்டது என்பதோடு மட்டுமல்லாமல், இன்று வரை எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகின்றது என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்.

في السنة الثالثة من خلافة عمر بن الخطاب رسالة من أبي موسى الأشعري عامله على البصرة يقول فيها ¸ إنه يأتينا من أمير المؤمنين كتب، فلا ندري على أيٍّ نعمل، وقد قرأنا كتابًا محله شعبان، فلا ندري أهو الذي نحن فيه أم الماضي·. عندها جمع عمر أكابر الصحابة للتداول في هذا الأمر، وكان ذلك في يوم الأربعاء 20 جمادى الآخرة من عام 17هـ. وانتهوا إلى ضرورة اختيار مبدأ للتأريخ الإسلامي. وتباينت الآراء، فمنهم من رأى الأخذ بمولد النبي صلى الله عليه وآله وسلم ، ومنهم من رأى البدء ببعثته، ومنهم من رأى العمل بتقويم الفرس أو الروم. لكن الرأي استقر في نهاية المطاف على الأخذ برأي علي بن أبي طالب الذي أشار بجعل مبدئه من لدن هجرة الرسول ³ من مكة إلى المدينة، وكذلك برأي عثمان بن عفان الذي أشار أن يكون المحرم هو مبتدأ التاريخ الإسلامي لأنه كان بدايةً للسنة في التقويم العربي من قَبل الإسلام.


நாயகம் தன் தாயகத்தை விட்டும் மதீனா நகருக்கு சென்றதனையே ஹிஜ்ரத் என்று குறிப்பிடுகின்றோம். இத்தகைய ஹிஜ்ரத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் ஏராளம் ஏராளம். ஆட்சியாளரிலிருந்து கடைநிலை ஊழியர் வரை உள்ள எல்லா தரப்பினருக்கும் தேவையான வாழ்வியல் தத்துவங்களை ஹிஜ்ரத் அழகாக சொல்லித் தருகின்றது.
ஹிஜ்ரத் தலைவர்களுக்கு முன்னோடி
நாயகம் (ஸல்) அவர்கள் இனி மக்காவில் தன் வாழ்வினை தொடர்வது சாத்தியமில்லை என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டபோது ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொன்டார்கள் என்பதை நாம் அறிவோம். தன் உயிருக்கு ஆபத்து என்றதும் உயிராய் பழகிய தன்னுடைய ஆருயிர் தோழர்களை கலட்டிவிட்டு தான் மட்டும் பிழைத்தால் போதும் என்ற சுயநலப்போக்கோடு செயல்படவில்லை. மாறாக முதலில் தன்னை நம்பி வந்த தோழர்களை ஹிஜ்ரத் செய்யும்படி கட்டளையிட்டுவிட்டு பின்பே அவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள் என்ற சரித்திரத்தைப் புரட்டி பார்க்கும் போது நாயகத்தின் போதுநலப்போக்கும், தன் தோழர்களின் மீது கொண்டிருந்த அக்கரையிம் தான் காட்சியளிக்கிறது. இது ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தலையாய பண்புகளில் ஒன்றாகும். தன்னை நம்பி வந்தவனுக்கு துரோகம் செய்வதோ, தன்னுயிருக்கு ஆபத்து என்றவுடன் தன் கூட்டாலிகளை கூட்டிக் கொடுப்பதோ, அற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு விலைபோவதோ, பிறருக்கு கைப்பிள்ளையாக போவதோ ஒரு நல்ல தலைவனின் பண்பு அல்ல. ஏன் அவன் தலைவனே அல்ல. தொண்டர்களின் துயரங்களையும், கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்பவனே உண்மையான தலைவன். பெருமானார் அவ்வாறு வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல தலைமைதுவத்திற்கு ஓர் இலக்கணமாகவே திகழ்ந்தார்கள் என்பது தான் உண்மை.

நண்பரின் அர்பணிப்பு

பெருமானார் (ஸல்) அவர்கள் தன்அருமைத் தோழர்களுக்கு ஹிஜ்ரத் செய்யும் உரிமையை வழங்கிய போதும்,  அபுக்கர் (ரலி) அவர்களை மட்டும் தாமதிக்கும் படியும், உன்னோடு ஒருவர் வருவார் என்றும் கூறியதற்கு காரணம், தன் பயணத்தை அபூக்கர் (ரலி) அவர்களுடன் மேற்கொள்ள விருமபியதே ஆகும். நாயகம் தான் தன்னுடன் வருவார்கள் என்பதை விளங்கிக் கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் வீட்டின் கதவை திறந்து வைத்து நாயகத்தின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள். எங்கே நாயகம் வரும் நேரத்தில் தன் வீட்டின் கதவு மூடி இருந்து நாயகம் திரும்பிச் சென்று விடுவார்களோ என்று அபூபக்கர் (ரலி) நாயகத்தின் மீது கொண்டிருந்த ஏக்கமும், அக்கரையும் அவர்களை வீட்டை திறந்திருக்கவே செய்தது. பெருமானாரோடு தன் பயணத்தை தொடர்ந்தால் அது தன் உயிருக்கும் ஒலை வைக்கும், மக்காவில் விட்டுச் செல்கின்ற தன்னுடைய குடும்பத்தார்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது என்பதை அபூபக்கர் (ரலி) நன்கு அறிந்திருந்தார்கள். இருந்தாலும் பெருமானாரோடு தன் பயணத்தை சந்தோஷத்தோடு தொடர்ந்தார்கள் என்பதை நினைத்துப் பார்கின்ற போது, இருவருடைய நட்பின் ஆழத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று வள்ளுவன் குறிப்பிடுவது போன்று துயரத்தில் கைகொடுத்து உதவும் கரமாய் நண்பன் இருக்க வேண்டும் என்ற நட்பின் இலக்கணத்தை ஹிஜ்ரத் அழுத்தமாய் பதிவு செய்கின்றது.

நன்றியுணர்வு

நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த போது மஸ்ஜிது நபவியை சுற்றியுள்ள அனைத்து வாசல்களையும் அடைக்கும்படி உத்தரவிட்ட பெருமானார், அபூபக்கர் (ரலி) அவர்களின் வாசலை மட்டும் அடைக்க வேண்டாம் என்று உத்திரவிட்டார்கள் என்ற வரலாற்றின் பிண்ணனியை ஆராய்ந்து பார்க்கும் போது நமக்கு தெரிய வருகின்ற தகவல், அன்றைக்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் தனக்காக வீட்டுக்கதவை திறந்து வைத்து எதிர்பார்த்து இருந்ததை பத்து ஆண்டுகள் கடந்தும் நாயகம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல அதற்கு கைமாறும் செய்தார்கள் என்பதே ஆகும்.
ஒருவர் செய்கின்ற உபகாரத்தை எண்ணிப் பார்ப்பதும், அதற்கு பிரதி உபாகரம் செய்வதுமே நல்ல முஃமினின் பண்பு என்பதை நாயகம் அவர்கள் போதித்துள்ளார்கள். தன் வேலை முடிந்தவுடன் உன் வேலையை பார்த்துகிட்டு போ என்றோ, காரியம் முடிந்ததும் கச்சிதமாய் நகர்ந்து கொள்வதோ ஒரு முஃமினின் அடையாளமாய் இருக்க முடியாது. தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனது கூலியை கொடுத்துவிடுங்கள் என்கின்ற நபிமொழி நமக்கு போதிப்பது, நமது விசுவாசிகளை ஒரு போதும் நாம் ஏமாற்றிவிடக் கூடாது என்பதையே ஆகும்.

ஹிஜ்ரத் நம்பிக்கையின் உரைவிடம்

பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த ஹிஜ்ரத் நம்பிக்கை நாணயத்தின் உரைவிடமாக இருந்தது. காரணம் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தினர் ஹிஜ்ரத் செய்த போது (நாட்டை விட்டு இஸ்ரேலுக்கு சென்ற போது) அக்கூட்டத்தினர் தங்களுக்கு தொல்லை தந்து வந்த அவ்வூர் வாசிகளின் பொருட்களையும் சேர்த்து எடுத்து கொண்டு சென்றனர். ஆனால் பெருமானார் ஸல் அவர்களும், அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரத்தை மேற்கொண்ட போது தங்களின் சொத்துக்களை, சொந்த பந்தங்களை, மனைவி மக்களை, அமானிதப் பொருட்களை விட்டுச் சென்றனர். குறிப்பாக பெருமானார் வீட்டுக்கு வெளியிலே தன்னைக் கொல்ல வாளோடு ஒரு கூட்டம் நிற்கின்றது, வீட்டினுள்ளே அவர்களின் அமானிதப் பொருட்களை பெருமானார் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது பெருமானாரின் நாணயமும், நம்பகத்தன்மையும் நம் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்கின்றது. அடுத்தவன் பொருட்களை ஆட்டையப் போடுபவர்களும், பாட்டனர்ஷிப் என்ற பெயரிலேயே பாட்னராக சேர்பவரின் பணத்தை சுருட்டிச் செல்பவர்களும், தன் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் சேர வேண்டிய சொத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு அவர்களை மொட்டை அடிப்பவர்களும் பெருமானாரின் ஹிஜ்ரத் வாழ்க்கையை திருப்பார்த்தால் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டு.

ஹிஜ்ரத் சாமான்யனுக்கு ஒரு வழிகாட்டி

ஹிஜ்ரத் திட்டமிடுபவர்களுக்கு பாடமாகவும், வழிகாட்டியாகவும் அமைகின்றது. காரணம் மூஸா (அலை) அவர்கள் தன் கூட்டத்தாரை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்ற நைல் நதியை பிழந்தார்கள் அதன் மூலம் தப்பித்துச் சென்றார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த விஷயத்தை அவர்களால் மட்டுமே செய்ய முடியும். அதே சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளியின் பார்வையிலிருந்து தப்பிபதற்காக நம்பிக்கைக்குரிய நபரை பிராயணத் தோழராக (அபூப்க்கர் (ரலி)) தேர்ந்தெடுத்தது, வழிகாட்டியாக ஆமிரு ப்னு ஃபுஅய்ராவை தேர்ந்தெடுத்தல், உளவாளியார அப்துல்லா இப்னு அபீ பக்கர், உணவை சுமப்பதற்கு அஸ்மா என தேவையான எல்லா விஷயங்களையும் திட்டம் தீட்டிக்காட்டியது ஒரு சாமான்யனுக்கு எவ்வாறு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

ஈமானை விதைத்திடும் வித்துக்கள்

ஷுஐப் (ரலி) அவர்கள் பெருமானார் மதீனாவிற்கு சென்ற பின்பு தானும் மதீனா நோக்கி பயனமாகிறார்கள். இந்த விஷயத்தை முஷ்ரிக்குகள் கேள்விபட்டு அவர்களை பிடிக்க வந்தபோது மக்காவில் தன்னுடைய சொத்துக்கள் இருக்கும் இடத்தைக்கூறி அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என்னைவிட்டு விடுங்கள் என ஷுஐப் (ரலி) அவர்கள் கூறியது ஈமானில் சரிவை எந்த நேரத்திலும் சந்தித்து விடக்கூடாது என்பதையே போதிக்கிறது.

حدثنا حماد بن سلمة عن علي بن زيد عن سعيد ابن المسيب قال: خرج صهيب مهاجراً إلى رسول الله صلى الله عليه وسلم فاتبعه نفر من المشركين فانتثر ما في كنانته وقال لهم: يا معشر قريش قد تعلمون أني من أرماكم ووالله لا تصلون إلي حتى أرميكم بكل سهم معي ثم أضربكم بسيفي ما بقي منه في يدي شيء فإن كنتم تريدون مالي دللتكم عليه قالوا: فدلنا على مالك ونخلي عنك. فتعاهدوا على ذلك فدلهم ولحق برسول الله صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه وسلم: " ربح البيع أبا يحيى " . فأنزل الله تعالى فيه: " ومن الناس من يشري نفسه ابتغاء مرضاة الله والله رءوف بالعباد " .

கொடுத்த வாக்கை காப்பாற்றுதல்

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்ய நாடியபோது காபிர்கள் அவர்களை தடுத்தனர். காரணம் கேட்டதற்கு நீ நாளை அந்த முஹம்மதுடன் சேர்ந்து எங்களுக்கு எதிராக போர் தொடுப்பாய் என்று காபிர்கள் கூறினர். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ஒருக்கால் போர் ஏற்பட்டால் கண்டிப்பாக நான் போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்று வாக்குறுதி அளித்து மதினாவிற்கு சென்றார்கள். காலங்கள் உருண்டோடின. பத்ரின் கலத்திலே நிற்கிறார்கள். போருக்காக யாரெல்லாம் தயாராக இருக்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட, ஆட்கள் குறைவாக உள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூறினார்கள் ஜாபிர் (ரலி) அவர்கள் இது போன்று அன்று நான் ஹிஜ்ரத் செய்த போது வாக்குறுதி அளித்தேன் யாரஸுலல்லாஹ் என்றதும் நீ முதலில் உன் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டாம் என்று கூறினார்கள் என்றால் வாக்குத்தவறா வாய்மைமிகுந்தவராக இருந்தார்கள் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவனே உண்மையான முஃமின் மாறு செய்பவன் நயவஞ்சகன் என்ற கருத்து போதிந்த நபிமொழிகளை நாம் ஏராளமாகக் காணலாம்.

அகதிகளுக்கு அரவனைப்பு

ஹிஜ்ரத் இன்றைக்கு சூராவளியாக உருவெடுத்திற்கும் பல பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வுகளை நருக்கென்று குறிப்பிடுவது போன்று அகதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஹிஜ்ரத் கற்பிக்கின்றது. மனித உரிமைகள் அத்துமீறப்பட்டுக் கொண்டிருக்கம் சூழ்நிலையில் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பினை சமுதாயம் விளங்க வேண்டும். மியான்மர், பர்மா, இலங்கை, ஒரிஸா என்று அங்குள்ள மக்கள் தங்களின் சொந்த உரிமைகளை இழந்து தங்களுக்கென முகவரியை தேடிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நம்மால் முடிந்த உதவியினை அவர்களுக்கு செய்யத் தவரக்கூடாது. மக்காவை விட்டும் உடுத்திய துணியோடு கிளம்பிய அந்த முஹாஜிர்கள் பின்நாட்களில் மிகப்பெரும் செல்வந்தர்களாக, சக்கிரவர்திகளாக மாறியதற்கு காரணம் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அன்சாரி ஸஹாபாக்களே. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என எல்லாவற்றையிம் விட்டுக்கொடுத்த கடைசியில் தங்களின் உயிரையிம் கொடுத்தார்கள் என்பதையும், அகதிகளாய் வந்தவர்களை இம்மண்ணின் மைந்தர்களாக நடத்தினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அதில் கடுகளாவது நாம் இன்றைய அகதிகளுக்கு செய்ய வேண்டும் என்ற மனோநிலை நமக்கு வரவேண்டும்.

எதிரிகளை அரவனைத்த ஹிஜ்ரத்

பெருமானார் (ஸல்) அவர்கள் சரியாக ஹிஜ்ரத் செய்து பத்து ஆண்டுகள் கழித்து மக்காவை வெற்றி கொண்டார்கள். மக்காவில் உள்ள அனைவரும் தங்களது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எண்ணிய போது பெருமானார் யாருமே எதிர்பார்க்காத மன்னிப்பு என்ற தீர்ப்பினை பொதுப் பிரகடனம் செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் தான் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு கஃபதுல்லாஹ்வில் சிறிது வணங்கி செல்வோம் என்ற எண்ணத்தில் அப்போதைய பொருப்பாளியான உஸ்மான் இப்னு அபீ தல்ஹா அவர்களிடத்தில் சாவியை கேட்டபோது தரமறுத்த அந்ச உஸ்மானை அழைத்து வந்து அவர்களிடமே பொருப்பை ஒப்படைத்தார்கள் என்ற செய்திகளையெல்லாம் பார்க்கும் போது தனக்கு துன்பம் விளைவித்தவனையும் மன்னித்து வாழ வேண்டும் என்கின்ற தத்துவத்தை ஹிஜ்ரத் உணர்த்துகின்றது. தன்னுடைய எதிரிகளை எப்படி பழி வாங்கலாம் என்ற திட்டத்தையே முழுநேர வேலையாக பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் எதிரியை மன்னித்ததோடு மட்டுமல்லாமல் அவனை கௌரவிக்கும் செய்த பெருமானாரின் செயல் நமக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கின்றது.
இது போன்று ஏராளமான படிப்பினைகள் ஹிஜ்ரத்தில் பொதிந்து கிடக்கின்றன.   
ஹிஜ்ரத் எடுக்க எடுக்க வந்துக் கொண்டிருக்கும் அமுத சுரபி
ஹிஜ்ரத் அள்ள அள்ள வந்துக் கொண்டே இருக்கும் அச்சயப் பாத்திரம்
ஹிஜ்ரத் ஓர் வற்றாத நதி. ஒன்றல்ல இரண்டல்ல தோண்தோண்ட வந்துக் கொண்டிருக்கும் படிப்பினைச் சுரங்கம்.
ஹிஜ்ரத் இரத்தினச் சுருக்கமாக இச்சமுதாயத்திற்கு கூற வருகின்ற செய்தி நீங்கள் தீனுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் ஆனால் எதற்காகவும் தீனை நீங்கள் தியாகம் செய்யாதீர் என்பதையே ஆகும்.
قال النبي صلي الله عليه وسلم المهاجر من هحر ما نهي الله عنه.

















  



3 comments:

Sathak Maslahi said...

அருமையான தொகுப்பு.
ஆதாரப்பூர்வமான தகவல்கள்
அருமை
இதுபோன்ற வலைப்பதிவு உலகில் வாழும் எல்லா ஆலிம்களின் பார்வையிலும் பட்டால் நன்றாக இருக்குமே
என்ற அடிப்படையில் உங்கள் வலைதளத்தை நான் ஏற்கனவே Facebook ورثة الانبياء குழுமத்தில் பகிர்ந்து விளம்பரப்படுத்தியுள்ளேன்.
http://www.facebook.com/groups/374766439273936/

மௌலவி s.k.முஹமத் முஹ்யித்தீன் ஹௌஸி B.A said...

Nice

மௌலவி s.k.முஹமத் முஹ்யித்தீன் ஹௌஸி B.A said...

Nice