அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 March 2018

எது மகிழ்ச்சி ?


Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


பணம் பணம் என்று பணத்தையும் பதவியையும் மட்டுமே தேடி அலையும் இன்றைய அசாதாரண சூழலை காண முடிகிறது. காரணம் பணமும் பதவியும் இருந்துவிட்டால் நாம் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்ற ஓர் குருட்டுத்தனமான நம்பிக்கை தான். இந்த இரண்டும் இல்லாமல் வாழும் வாழ்க்கையை மகிழ்வான வாழ்க்கை என்பதை மனம் ஏற்க எனோ மறுக்கிறது. 

மகிழ்ச்சி என்பது நாம் வாழும் நிம்மதியான வாழ்க்கையில் தான் இருக்கிறது. போதுமென்ற மனமும் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற குணமும்  உள்ளவர்களிடத்தில் அது நிறையவே இருக்கிறது. 

ஆனால் உண்மையான செல்வம் எது என்பதை பலர் உணராமலேயே  இந்த உலகை விட்டு பிரிந்து விடுகின்றனர் .
ஆனால்  எது உண்மையான சொத்து என்பதையும், அதனை மக்கள் அனுபவிக்காமலேயே மிகவும் பொடுபோக்காக இருக்கின்றார்கள் என்பதனையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக சுருக்கமான வார்த்தைகளில் சொல்லி விட்டார்கள் :

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّهم عَنْهمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ:
(( نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ ))


மகிழ்ச்சி, ஓய்வு பற்றி பிற நூல்களில் இருந்து : 


01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.

02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.

03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.

04. வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.

05. வாழ்க்கை என்கின்ற கட்டடத்தில் ஏற்படுகின்ற விரிசல்களை இணைக்கின்ற சீமென்டு போன்றதுதான் நகைச்சுவை உணர்வாகும்.

06. எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்.

07. பிறவியால் உங்களுக்கு அமைந்த தோற்றத்தில் நீங்கள் மாற்றம் செய்ய முடியாது, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே புகைப்படத்திலும் காட்சி தருவீர்கள். ஆனால் உள்ளத்தை மலர்ச்சியாக்கி நீங்கள் தரும் முக மலர்ச்சி உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..

08. நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது.

09. அழிவிலும் பெரிய இலாபம் இருக்கிறது. நன்மைகளோடு நம்முடைய தவறுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கப் போகிறோம் என்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். – தாமஸ் அல்வா எடிசன்

10. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.

11. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது.

12. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்ற கடவுள்தான் நமது பிரச்சனைகளின் தீர்வுக்கும் காரணமாக இருக்கிறார். ஆகவே அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றுகிறது.

13. உலகம் எனக்கு எத்தனை சிரமங்களை தந்தாலும், அதற்குப் பதிலாக எனது படுக்கையை இழக்கமாட்டேன் என்றான் நெப்போலியன்.

14. மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள்.

15. நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.

16. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம்.

17. பூக்காத மரங்கள் காய்ப்பதில்லை கடவுள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் நீங்களும் பூக்கும் மரமாவீர்கள்.

18. நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீங்கள் மட்டும்தான் தனியாக அழவேண்டி வரும். உங்கள் மகிழ்ச்சியில் அக்கறை காட்டும் உலகம் ஒருபோதும் துன்பத்தில் அக்கறை காட்டாது.

19. நாள் பூராவும் பணியாற்றிய உடம்புக்கு ஓய்வு கொடுப்பது அவசியம், ஓய்வைப்போல மறுபடியும் சக்தி அளிக்கக் கூடியது எதுவும் இல்லை. ஓய்வு நரம்புகளை முறுக்கேற்றி மன அமைதியை ஏற்படுத்த மிகச் சிறந்த டானிக்காகும்.

20. ஓய்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள தனியான சலுகையாகும், நன்றி பாராட்டி அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

21. ஓய்வெடுக்கத் தெரிந்தவன் நரகங்களை வென்றவனைவிட பெரியவனாகும் என்றார் பென்ஜமின் பிராங்கிளின்.

22. உலகம் முழுவதும் ஐம்பது வீதமான மக்கள் தூக்கம் இல்லாமல் அலைகிறார்கள் தொன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. இவை எதுவுமே வேண்டியதில்லை உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருங்கள் தூக்கம் தானே வந்துவிடும்.

23. நேரம் கழித்து எழுந்திருப்பது கூட தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். காலை ஆறு மணிக்கு மேல் தூங்குகின்ற பழக்கத்தை விடுங்கள், தூக்கமின்மையை தவிர்க்க அது நல்ல வழி.

24. இயற்கையாக ஒரு மனிதனுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் போதும், பழக்கம் அதை ஏழு மணி நேரமாக்கியுள்ளது, சோம்பல் ஒன்பது மணியாக்கி, தீய பழக்கங்கள் அதை பதினொரு மணியாக உயர்த்திவிட்டது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதல்ல எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் என்பதே முக்கியம். பகலில் அரை மணி நேரம் தூங்குவது இரவில் மூன்று மணி நேரம் தூங்குவதற்கு சமம்.

(நன்றி: அலைகள் பழமொழிகள்)


இலக்கை மறந்த பயணம் : 


மகிழ்ச்சியாகவும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, செய்யும் செயல்களில் அப்படியே மூழ்கிப் போய் அடிப்படை நோக்கத்தை மறந்து, நிம்மதியைத் தொலைத்துவிடுகிறோம். ஒரு புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் ஒரு பள்ளி ஒன்றில் உரையாற்றினார். தனது பேச்சிலே நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை இடைவெளி இல்லாமல் வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டார். ஆனால், மாணவர்கள் மறந்தும்கூடச் சிரிக்கவில்லை. ஒரு வேளை அனைத்து மாணவர்களுக்கும் ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ்தான் தாய்மொழியாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சாளர் மனதுக்குள் குழம்பினார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். “நாளைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்குப் பேச ஒரு பெரிய பேச்சாளர் வாறாரு. நீங்க யாராச்சும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைச்சீங்க, தோலை உரிச்சிடுவேன்” என முந்தைய நாளே மாணவர்களிடம் எச்சரித்து வைத்திருந்தார். புதுப் பிரம்புடன் இரண்டு வாத்தியார்களை அதற்கான வேலையிலும் ஈடுபடுத்தியிருந்தார். பிறகு எந்த மாணவனுக்காவது சிரிப்பு வரும்?


நம்முடைய மனமும் பல நேரம் இந்தத் தலைமை ஆசிரியரைப் போன்றே வாழ்க்கையை ரசிக்க வேண்டிய நேரத்தில் ரசிக்காமல் எப்போது பார்த்தாலும் செய்ய வேண்டிய வேலைகளை, அடைய வேண்டிய லட்சியங்களை, கட்ட வேண்டிய மாதத் தவணைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, சிரிப்பதைத் தள்ளிப் போட்டுவிடுகிறோம். இந்த விஷயங்களெல்லாம் நடந்தால்தான் சிரிப்பேன் என மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில முன்நிபந்தனைகளை வேலை வெட்டியில்லாமல் விதித்துக்கொள்கிறோம். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலேயே நமது மகிழ்ச்சியையும் தொலைத்துவிடுகிறோம்.

பிறருக்கு கொடுத்து வாழுங்கள் : 

 وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏ 

அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். (76 : 08)


சக மனிதர்களின் துன்பங்களைக் கண்டுருகும் இளகிய மனமும், அடுத்தவருக்கு அள்ளித் தரும் தன்மையும், தேவையுள்ளோர்க்கு ஓடோடி உதவி செய்வதற்கான எண்ணங்களையும் ஊற்றெடுக்கச் செய்ய தூண்டுகிறது இஸ்லாம். “எவர் தங்கள் பொருட்களை, இரவிலும், பகலிலும் ரகசியமாகவும், பரமரகசியமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலி இறைவனிடத்தில் உள்ளது!” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. குறுகிய மனம், பேராசை, கஞ்சத்தனம் இவை மனித வாழ்வின் நோக்கத்தை தகர்த்திடும் தீமைகளாய் அது அடையாளப்படுத்துகிறது.

வாழ்க்கையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தான் ஈட்டிய செல்வத்தை செலவழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும், மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். செல்வமென்னும் அந்த இறையருளில் தேவையுள்ளவர்களின் பங்குமிருப்பதை மறந்துவிடக்கூடாது. உதவி பெறும் கரங்களைவிட வாரி வழங்கும் கரங்களே சிறந்தவை!

“தருமம் செய்வோர் இறைவனால் நேசிக்கப்பட்டு அவனது அருகாமையில் இருப்பார். மக்கள் மனங்களில் இடம் பிடித்திருப்பார். அதேபோல, சுவனத்திற்கு அருகிலும் இருப்பார். கஞ்சத்தனம் செய்பவனோ இறைவனின் கருணையைவிட்டு விலகி வெகுதூரமிருப்பான். மனிதர்களால் வெறுக்கப்பட்டிருப் பான். அதேபோல, நரகத்திற்கு மிக அருகில் இருப்பான். கஞ்சத்தனம் கொண்ட ஒரு தொழுகையாளியை விட கல்வியறிவற்ற ஒரு கொடை வள்ளலே இறைவனின் பார்வையில் சிறந்தவனாவான்”  என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.


பிறரின் மகிழ்வும் தான் உன் மகிழ்ச்சி : 


தேவையுள்ளோருக்குத் தராமல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியும், பொன்னும் அவற்றின் உரிமையாளர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் தண்டனைப் பெற்றுத் தரும் சோதனைக் களஞ்சியங்களாகவே மாறி நிற்கும். இவற்றால் ஏற்படும் எதிர்விளைவுகள் மிக மோசமானவையாகவும் இருக்கும். தன்னுடைய செல்வத்திலிருந்து அடுத்தவருக்கு உரிமையானதைத் தராதவரின் செல்வம் இறுதித் தீர்ப்பு நாளில் அவற்றின் உரிமையாளர்களை பழி தீர்க்கும் பாம்புகளாய் மாறி நிற்கும் என எச்சரிக்கிறது இஸ்லாம்.

என்னுடைய செல்வம்..! என்னுடைய செல்வம்..!! என்று மனிதன் கூப்பாடு போடுகின்றான். உண்மையில், அவனுடைய செல்வம் மூன்றுவகையானது. ஒன்று உண்டு, பருகி செலவழித்தது. அணிந்து இன்பம் கண்டு துய்த்தது. அடுத்தது, தனக்கும், தனது சந்ததிகளுக்குமாய் செலவழித்தது. மூன்றாவது, தேவையுள்ள வர்களுக்களுக்கு வழங்கி செலவு செய்து மறுமைக்காக சேர்த்துக் கொண்ட சிறப்புக்குரியது.

மறுமைநாளில் நடக்கும் வழக்கொன்றை நபிகளார்ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம்  தமது தோழர் அப்துல்லாஹ் பின் மஸூத்திடம், “அந்த இரண்டு வகையான மனிதர்களுக்கு இறைவன் ஏராளமான சொத்து, சுகங்கள், சந்ததிகளை அருளினான். மறுமையில், முதலாவது மனிதக் கூட்டத்தாரை அழைப்பான். அவர்களில் ஒருவரை அழைத்து, என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படி செலழித்தாய்? என்று கேட்பான்.

அதற்கு அந்த மனிதரோ, “என்னுடைய சந்ததிகள் வறுமையில் பீடிக்கப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சி நான் அவற்றை என் சந்ததிகளுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன்!” என்று பதில் சொல்வான்.

அதை கேட்டு இறைவன் இப்படி சொல்வான்: “உண்மையைத் தெரிந்து கொண்டால் குறைவாகவே மகிழ்ச்சியடைவாய். அதிகமாகக் கண்ணீர் சிந்துவாய். உனது சந்ததிகளுக்கு எது வரக்கூடாது என்று அஞ்சினாயோ அதையே உமது சந்ததிகளின் மீது இறக்கிவிட்டேன்!”

பின்னர், இரண்டாவது கூட்டத்தாரைச் சேர்ந்த மனிதனிடம், “என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படிச் செலழித்தாய்?” – என்று விசாரணை ஆரம்பமாகும்.

அதற்கு அந்த அடியான், “இறைவா நீ என் மீது சொரிந்த அருட்கொடைகளை உனது கட்டளைப்படியே அறவழிகளில் செலவழித்தேன். உனது எல்லையற்ற கருணையையும், அருளையும், பாதுகாப்பையும் மட்டுமே என் சந்ததிகளின் சொத்துக்களாய் விட்டு வந்தேன்!” என்பான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் சொல்வான்: “உண்மையை தெரிந்து கொண்டால், குறைவாகவே கவலை கொள்வாய். அதிகமாய் மகிழ்ச்சி அடைவாய். எவற்றை நம்பி உமது சந்ததிகளை விட்டு வந்தாயோ அவற்றையே நான் அவர்களுக்கு அருள்பாலித்துவிட்டேன்!”


அனைத்துமே  நம்மிடம் இருப்பதில் தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று நினைக்காமல் நமக்கு உள்ளதில் இருந்தும் இல்லாதவறுக்காக கொடுத்து அவர் மிகுந்த சந்தோஷத்துடன் அதனை பெற்றுக்கொள்ளும்போளுது உள்ள அவருக்கு உள்ள மகிழ்ச்சியை விட நமக்கு மிக அதிகமா மகிழ்ச்சியை தரும் என்பதில் எந்த வித மாற்று கருதும் இல்லையே !! 


அதனால் தானே அல்லாஹ் தன்னுடைய அருள் மறையில் கூட :


 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான்.

மரண தருவாயை சுவைத்த பின் தனக்கு மற்றொரு சிறிய வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அதில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பிறருக்கு கொடுத்துவிட்டு வருவேன் என்று மனிதன் கூறுவான் என்பதாகத்தானே  மனிதன் கூறுவதாக கூறுகட்டுகிறான் ...

எனவே வாழும் இந்த சொற்பமான வாழ்க்கையில் எல்லா வகையிலும் பிறர்க்கு உதவியாக இருந்து துணை புரிந்து எந்த விதத்திலும் பிறருக்கு கஷ்டத்தை கொடுக்காமல், நிம்மதி மற்றும் ஒவ்யு என்னும் இரு மிகப்பெரும் அருட்கொடைகளை பயன்படுத்தி  மகிழ்வுடன் வாழ அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள்புரிவானாக !! ஆமீன் !!

No comments: