அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 5 July 2018

யங்ஸ்டர்ஸ்

மனிதனின் மூன்று பருவங்களில் ஒவோன்றும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை மனிதனுக்கு தருவதுண்டு.
குழந்தை பருவம் என்பது பிறரிடம் இருந்து அனைத்தையும் கற்கும் பருவம். அந்த பருவத்தில் கற்பதன் பிரதிபலிப்பு தான் பின்னாட்களில் வெளிப்படும் செயல்பாடுகள். குழந்தை பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களும், நல்ல பல செயல்களையும் செய்து பழக்கப்பட்டிருந்தால் அதே தொடர்ச்சியாக இளமை பருவத்திலும் தொடரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் மிக முக்கியமான பொறுப்பாக இருக்கின்றது.
இந்த இளமை பருவத்தை, ஓடும் பாம்பை மிதிக்கும் வயது, கல்லை தின்றாலும் செரிக்கும் வயது என்பார்கள். குழந்தை பருவத்தையும் முதுமை பருவத்தையும் பலகீனமான பருவம் என்று சொல்லும் இறைவன், இளமை பருவத்தை தான் பலமிக்க பருவம் என்று சொல்கிறான்.
الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعفٍ قوة ثم جعل من بعد قوةٍ ضعفاً وشيبة يخلق ما يشاء وهو العليم القدير 
அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.   (30:54)

வாலிப பருவத்தின் முக்கியத்துவம்  :

வாலிப பருவம்  என்பது மிக முக்கியமான பருவமாகும். வாலிப பருவம் என்பது கிட்டத்தட்ட 13 வயதிலிருந்தே ஆரம்பமாகிறது. அதனை ஆங்கிலத்தில் டீன் ஏஜ் என்பார்கள். பல சாதனைகளை செய்ய துடிக்கும் பருவம் தான் இந்த இளமை பருவம்.  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் இருந்த ஸஹாபாக்களின் இளமை பருவத்தில் இருந்த ஸஹாபாக்கள் மார்க்கத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளனர். இதன் முக்கியத்துவத்தை உணர்த்த தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

قال رسول الله صلى الله عليه وسلم: “اغتنم خمسا قبل خمس: حياتك قبل موتك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وشبابك قبل هرمك، وغناك قبل فقرك” أخرجه الحاكم في المستدرك والبيهقي في شعب الإيمان عن ابن عباس وأحمد في مسنده.
ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் : 1. மரணத்துக்கு முன் வாழ்க்கையையும் 2. நோய்வயப்படும் முன் உடல் நலத்தையும் 3. வேலைக்கு முன் ஓய்வு நேரத்தையும் 4. முதுமைக்கு முன் வாலிபத்தையும் 5. ஏழ்மைக்கு முன் உள்ள செழிப்பையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த வாலிப பருவம்,   நல்ல செயல்களுக்கும் வித்திடுவதாக அமைவதும் தீய செயல்களின் தொடர்கதையாக அமைவதும் அதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தான் இருக்கிறது.
மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விகளில் “வாலிப பருவத்தை எப்படி கழித்தாய்?” என்பதும் ஒன்று என்பதனை நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.
வாலிபத்தில் என்ன செய்ய வேண்டும் ?
கடந்து விட்டதால் திரும்ப பெற முடியாத ஒன்று இந்த வாலிபம். இதனை எப்படி நாம் பயன் படுத்துகின்றோமோ அதன் பலனை நாம் நிச்சயம் மறுமையில் அடைந்து கொள்வோம். இதனை பால்படுத்தவும், சரியான முறையில் பயன்படுத்துவதை விட்டு நம்மை தடுக்கவும் நிச்சயமாக ஷைத்தான் பல்வேறு யுக்திகளை கையாள்வான் என்பது நாம் இன்று கண்கூடாக அனைவரின் கரங்களிலும் தவழும் கைபேசிகள் மூலமாக காணும் மறுக்க முடியாத உண்மை.
யார் ஒருவர் இந்த பருவத்தை சிறந்த முறையில் கழிக்கின்றாரோ அவருக்கு இறைவன் மிக உயர்ந்த பரிசை தருகின்றான். 

روى البخاري ومسلم في صحيحيها، من حديث أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله، اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله، ورجل تصدق، بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه”.

கண்மணி நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்  : மறுமையில் நிழலே இல்லாத அந்த நேரத்தில் அல்லாஹ் குறிப்பிட்ட ஏழு வகையினருக்கு நிழலை தருகின்றான்.  1. நீதமான தலைவர் 2. இறைவணக்கத்தில் தனது பருவத்தை கழித்த வாலிபர் 3. பள்ளிவாசலுடன் தன்னுடைய உள்ளதை தொடர்பு படுத்தி கொண்ட நபர் 4. அல்லாஹ்விற்காகவே பிரியம் கொண்டு அவனுக்காகவே ஒன்றாய் இருந்து அதற்காகவே பிரிந்த இரு நபர்கள் 5. ஒருவரை அழகான ஒரு பெண் தவறின் பால் அழைத்தும் அந்த நேரத்தில் இறைவனை நான் பயப்படுகிறேன் என்று சொன்ன அந்த நபர் 6. தனது இடது காய் அறியா வண்ணம் தர்மம் செய்தவர் 7. இறைவனை மட்டுமே நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்தவர்.
இப்படியாக இந்த வாலிப பருவத்தை இறைவன் விரும்பும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியில் இறை கல்வியை கற்று அறவழியில் இறைவணக்கங்களில் தன்னுடைய வாலிப பருவத்தை இளைஞர்கள் கழிக்க வேண்டும்.

வாலிப ஸஹாபாக்கள் :
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று புரட்டி பார்த்தால் கண்மணி நாயகத்துடன் இருந்த வாலிப பருவத்து ஸஹாபாக்கள் மார்க்க விஷயத்திலும், இறை மற்றும் இறை தூதரின் பொருத்தத்தை பெறுவதிலும் எந்த அளவுக்கு முனைப்புடன் இருந்துள்ளார்கள் என்பது நமக்கு புரியும்.

அவர்களில் சிறு வயது முதலே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் இருந்து, பெரும் பெரு பெற்று, சிறு வயதிலேயே இறை வேதத்தின் விளக்கத்தையும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களிலும் சிறந்து விளங்கிய இன்றளவும் நமக்கு மத்தியில் மிக பிரபல்யமாக பேசப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு முறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வீட்டில் அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவரக்ளுடன் சிறு வயதுடைய ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருக்கும் சமயத்தில் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தொழுகைக்காக ஒழு செய்ய தேவையான தண்ணீரை தயார்படுத்தி வைத்தார்கள் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒழு செய்ய வந்த உடன் அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம், நாயகமே, இது உங்களுக்காக அப்பாஸ் உடைய மகன் தயார் செய்து வைத்தார்கள் என்று சொன்னதும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக,
 اللهم فقهه فى الدين وعلمه التأويل
யா அல்லாஹ்! அவருக்கு மார்க்கத்தில் ஆழமான ஞானத்தையும் குர்ஆனின் விரிவாக்கத்தையும் கற்று கொடுப்பாயாக என்று துஆ செய்தார்கள்.

இப்படி அந்த சிறு வயது முதலே மார்க்கத்தில் முனைப்புடனும் இறை மற்றும் இறை தூதரின் பொருத்தத்தையும் பெறுவதில் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். இன்னும் சமூக பொறுப்புணர்ச்சி உடையவர்களாகவும், கல்வி ஞானத்தை கற்பதில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருக்க வேண்டும், அதுவே மிக பிரகாசமான ஒரு வாழ்வை தரும். அல்லாஹ் நம் காலத்து இளைஞர்களையும், பின் வரும் நமது சந்ததியினரையும் இந்த சிறந்த கூட்டத்தில் ஆகியருள்வானாக. ஆமீன்.

No comments: