அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 10 August 2017

வேண்டும் மற்றொரு சுதந்திரம்



ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த 90 நாடுகளில் முதன் முறையாக சுதந்திரம் பெற்றது இந்தியாவே அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பலர். எந்தவொரு மத பேதமில்லாமல் அனைத்து சமூக மக்களும் ஒன்று சேர்ந்து சுதந்திரத்திற்காக போராடினார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் போராட்டம் மட்டும் மறைக்கப்படுவது அபத்தமாகும். சில வருடங்களுக்கு முன்பு “தி ஹிந்து”  தமிழ் நாளிதழில் வெளியான நடுப்பக்க கட்டுரையில் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் திரிக்கப்பட்டிருக்கும் மறைக்கப்பட்டிருக்கும் வரலாறுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த்து. அதில் இஸ்லாமியர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் எடுத்துக் காண்பிக்கப்பட்டது.

ஒரு சமூகத்தை வளர்க்க நினைத்தாலோ அல்லது அழிக்க நினைத்தாலோ முதலில் அதன் வரலாற்றில் தான் கைவைக்க வேண்டும்.
வரலாறு என்பது அடையாளம். அந்த அடையாளத்தை அழித்துவிட்டால், மிக எளிதாக ஒரு சமூகத்தை முடக்கிவிடலாம். அதன் காரணமாகவே தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வரலாறுகளில் கை வைக்கிற வேலை நடந்து கொண்டிருக்கிறது.

முஸ்லீம்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்பதற்கு அடையாளம் அவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது தான். எதிரி நாட்டின்  மொழியை நாங்கள் கற்க மாட்டோம் என்று அதை ஹராமாக்கி பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடைசெய்தார்கள். இப்படி தியாகம் செய்தவர்களின் நிலை தான் இன்று கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள். அன்று ஆங்கிலேயர்களுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் நின்று ஜால்ரா அடித்தவர்கள் இன்று உயர் பதவியில் இருக்கிறார்கள்.
ஆனால் அன்றே சுதந்திர போராட்டத்திற்கு முக்கிய பதவி வகித்தவர்களின் பட்டியலை பாருங்கள்:

  1. நவாப் சிராஜுத் தௌலா
  2. மைசூர் புலி ஷஹீத் திப்பு சுல்தான்
  3. ஹஜரத் ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி
  4. ஹஜரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் தெஹ்லவி
  5. ஹஜரத் சையத் அஹ்மத் ஷஹீத்
  6. ஹஜ்ரத் மவுலானா விலாயத் அலி சாதிக்பூரி
  7. அபு ஜஃபர் சிராஜுத்தீன் முஹம்மத் பஹதுர்ஷா ஜஃபர்
  8. அல்லாமா ஃபஜ்ல ஹக் கைராபாதி
  9. ஷஹ்ஜாதா ஃபைரோஜ் ஷாஹ்
  10. மவுல்வி முஹம்மத் பாகர் ஷஹீத்
  11. பேகம் ஹஜ்ரத் மஹால்
  12. மவுலானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ்
  13. நவாப் கான் பஹாதுர் கான்
  14. அஜீஸான் பாய்
  15. ஷாஹ் அப்துல் காதிர் லுதியானவி
  16. ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர மக்கி
  17. ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் காஸிம் நானொத்தவி
  18. ஹஜ்ரத் மவுலானா ரஹ்மதுல்லா கைரானவி
  19. ஷேகுல் ஹிந்த் ஹஜ்ரத் மவுலான மஹ்மூதுல் ஹஸன்
  20. ஹஜ்ரத் மவுலானா உபைதுல்லாஹ் ஸிந்தி
  21. ஹஜ்ரத் மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி
  22. ஹஜ்ரத் மவுலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி
  23. மவுலானா பர்கதுல்லாஹ் போபாலி
  24. ஹஜ்ரத் மவுலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ்
  25. ஸஹ்பானுல் ஹிந்த் மவுலானா அஹ்மத் ஸயீத் தெஹ்லவி
  26. ஹஜ்ரத் மவுலானா சையத் ஹுஸைன் அஹ்மத் மதனி
  27. ஸய்யீதுல் அஹ்ரார் மவுலானா முஹம்மத் அலி ஜவ்ஹர்
  28. மவுலானா ஹஸரத் மூஹானி
  29. மவுலானா ஆரிஃப் ரிஜ்வி
  30. மவுலானா அபுல் கலாம் ஆஜாத்
  31. ரயீஸுல் அஹ்ரார் மவுலானா ஹபீபுர் ரஹ்மான் லுதியானவி
  32. டாக்டர் ஸயீஃபுத்தீன் கிச்லு
  33. மஸீஹுல் முல்க் ஹகீம் அஜ்மல்கான்
  34. மவுலானா மஜாஹிருல் ஹக்
  35. மவுலானா ஜஃபர் அலி கான்
  36. அல்லாமா இனாயதுல்லாஹ் கான் மஷ்ரீகி
  37. டாக்டர் முக்தார் அஹ்மத் அன்ஸாரி
  38. ஜெனரல் ஷாஹ்னவாஜ் கான்
  39. ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் மியான்
  40. மவுலானா ஹிஃப்ஜுர் ரஹ்மான் ஸுயுஹாரி
  41. ஹஜ்ரத் மவுலானா அப்துல் பாரி ஃபிரங்கிமஹாலி
  42. கான் அப்துல் கப்பார் கான்
  43. முஃப்தி அதீகுர் ரஹ்மான் உஸ்மானி
  44. டாக்டர் சையத் மஹ்மூத்
  45. கான் அப்துல் சமத் கான்
  46. ரஃபீ அஹ்மத் கித்வாயீ
  47. யூசுஃப் மெஹர் அலி
  48. அஷ்ஃபாகுல்லாஹ் கான்
  49. பாரிஸ்டர் ஆஸிஃப் அலி
  50. ஹஜரத் மவுலானா அதாவுல்லாஹ் ஷாஹ் புகாரி
  51. மவுலானா கலீலுர் ரஹ்மான் லுதியானவி
  52. அப்துல் கையூம் அன்ஸாரி
  53. பாரிஸ்டர் பதுருத்தீன் தையப்ஜி
  54. சுரைய்யா தையப்ஜி (நமது இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெண்மணி)

அதுமட்டுமல்ல, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களின் பட்டியலும் உண்டு

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மாகிலாபாத்ஒத்துழையாமை)
2. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத்அந்நியத் துணி எரிப்புஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார்கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது
10. மௌலானா அப்துல் காதர்

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில்வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்தநாடு அறியும். நம்மில் எத்தனை பேருக்கு பியாரி பீபீயை தெரியும். இதே கரூரைச்சேர்ந்த தமிழச்சிதான் இவர். இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும்குறைந்தது அல்ல.இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.
இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத்இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார்.

இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன்திருமணம் நடைபெற்றது.

அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம்பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டுசிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத்தெரிவித்தனர். ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கிவைத்தனர்.

மேலும்இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம் பெண் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாதசில முஸ்லிம்கள்பியாரி பீபீ போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லும்போதுஅவர் மீது கற்கலை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர். கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில்பங்குபெற அனுமதித்தார். கி.பி. 1920 முதல் கி.பி. 1947 வரை அனைத்து போராட்டத்தில் கலந்துகொண்டார் சாகிபு.

வ.உ.சி கப்பலை தனது சொந்த பணத்தில் மட்டும் கொண்டு வாங்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வசூல் செய்து தான் வாங்கினார். இதற்காகபங்குகளை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டார்.  கப்பல் பங்குகளில் பெருவாரியானவற்றை ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தை சேர்ந்த வள்ளல் ஹபீப் என்பவர் கொடுத்து உதவினார். கப்பல் கம்பெனி நஷ்டமான போதும்தனது பங்குத்தொகை எதையும் திருப்பி தர தேவையில்லை என்றும் தெரிவித்து விட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்து வ.உ.சி. எழுதிய கடிதம் தூத்துக்குடியில் உள்ள தமிழ்ப் பேராசிரியரும்வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியனிடம் உள்ளது. தியாகிகளை நினைவு கூறும் அரசாங்கம் வள்ளல் ஹபீபை ஏன் நினைவு கூற தயங்குகிறது என்பது தெரியவில்லை. அவருக்கு சிலை வைக்கவோவாரிசுக்கு உதவி செய்யவோ யாரும் கேட்கவில்லை. அவரது தியாகத்துக்கான அங்கீகாரம் தான் கேட்கின்றனர். இதனை வ.உ.சி.சிலை திறப்பின் போதுஇந்த விபரங்கள் அனைத்தும் தெரிந்த வ.உ.சி.யின் வாரிசுகளிடம் உத்தமபாளையத்துக்காரரைப் பற்றி மேடையில் பேசும் போது குறிப்பிடுங்கள் என்று முஸ்லிம் பெரியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால்அதனை சொல்ல அவர்களுக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. தெரிந்தே உண்மையை உலகுக்கு சொல்லாமல் மறைத்தனர்.

இன்னும் எவ்வளவோ வரலாறுகளை சொல்ல முடியும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு அதிகம் போராடி அதிகம் இழந்தவர்கள் முஸ்லிம்களே. ஆனால் இன்று..

சுதந்திரத்திற்கு பின்பு
தொடரந்து இஸ்லாமியர்களின் மீது பொய் குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் திணிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி யாகூப் மேமனின் தூக்கு வரை இஸ்லாமியர்களுக்கு அநீதியிழைக்கப்படுகிறது.
எந்த நாட்டிலும் இல்லாத எண்ணிக்கையில் இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் அதிகம். பாகிஸ்தான் நாடு தனியாக பிரிந்த போது நாங்கள் வரமாட்டோம் இது எங்கள் நாடு என்று பற்றோடு இருந்தவர்கள், மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கொடுமையிலும் கொடுமை சென்னை போன்ற பெரு நகரங்களில் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. உரிய தகுதி இருந்த போதும் முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

ஆனர்ல் மயிலாப்பூர் கபாலீஸ்வர கோவில் குளத்தை பரிசாக வழங்கியது முஸ்லீம்,

பீகாரில் மிகப் பெரிய கோவில் கட்ட இடமளித்தது முஸ்லீம்.

முகலாயர்களின் ஆட்சியில் எவ்வளவோ இடங்களை வாரி வழங்கி, எவ்வளவோ கோவில்களை கட்டிக் கொடுத்த்து முஸ்லீம்.

அரசாங்க அலுவலகங்களுக்கு இலவசமாக இடம் கொடுத்தது முஸ்லீம்.

ஆனால் இன்று முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடில்லை.

வேண்டும் மற்றொரு சுதந்திரம்
ஆங்கிலேயர்களிடத்திலிருந்து விடுதலை பெற்றோம். ஆனால் அக்கிரம ஆட்சியாளரிடமிருந்து விடுதலை பெற முடியவில்லை. இதற்கு ஆங்கிலேயர்களிடமே அடிமையாக இருந்திருக்கலாம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் இந்த ஒரு வருடங்களில் பா.ஜ.க அணுகிய விஷயங்களை பாருங்கள்.

பகவத் கீதையை தேசிய நூலாக்கும் முயற்சி, சமஸ்கிருத மொழியை முக்கியத்துவப்படுத்தும் முயற்சி, யோகா தினம், இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சி, அவ்வப்போது மத துவேஷத்தை வெளிப்படுத்தக் கூடிய அமைச்சர்களின் அறிக்கைகள், ஃபர்தாவை தடை செய்யும் முயற்சி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி, முத்தலாக் பிரச்னை, மாட்டிறைச்சி, தலித் மக்களை கொன்று குவித்தல், மக்கள் போராளிகளை கைது செய்தல், வருமான வரித்துறையைக் கொண்டு மிரட்டுதல் இப்படி மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அஸ்ஸலாம், குஜராத் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்கள் மீது கலவரம் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய அப்சல் குருவுக்கு தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் அதற்கு முன்பே பாபர் மஸ்ஜிதை இடித்தாக கமிஷன்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட உயிர் பலியானதற்கு காரணமானவர் என்று பொய் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு தூக்கு, ஆனால் 97 உயிர் சாவுகளுக்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்ட மாயா கோட்னானி பதவி வகிக்கிறார். இப்படி எவ்வளவோ குற்றச்சாட்டுகள். ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையானோம். அதைவிட ஆபத்தாக இவர்களிடம் மாட்டிக் கொண்டோம்.

தேசத்திற்காக போராடி உயிர் நீத்த பரம்பரையிலிருந்து வந்தவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என பட்டம் சூட்டப்படுகிறார்கள்.

எதிர்த்து கேட்பவர் முஸ்லிமாக இருந்தால் அவர் தீவிரவாதி; தேச விரோதி. முஸ்லிமல்லாதவராக இருந்தால் நக்சலைட்; தேச விரோதி.

வரலாறுகள் தூசி தட்டப்பட வேண்டும்
இதுவரை ஆதாரப்பூர்வமான வரலாறுகள் நம்மிடத்தில் உள்ளது என்றால் அதற்கு சே.திவான் போன்றவர்களே காரணம். ஆனால் அவரை இதுவரை நாம் கண்டுகொள்ளவில்லை. 24 இஸ்லாமிய அமைப்புகளில் யாரும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதுபோன்ற ஆளுமைகளை கண்டறிந்து அவர்களிடமுள்ள பொக்கிஷங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

 MRM அப்துர் ரஹீமின் பல நூல்கள் மறுபதிப்பு செய்யப்படவில்லை. சே.திவானின் பல நூல்கள் கையெழுத்து பிரதியாகவே உள்ளது. அவருக்குப் பிறகு நூல்கள் மண்ணாகிவிடும். வரலாறுகள் புதைந்துவிடும்.

‘‘யாதும்’ ஆவணப்படத்தின் மூலம் தமிழக முஸ்லீம்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தினார் கோம்பை அன்வர். அந்த ஆவணப்படத்திற்கு இன்டர்நேஷனல் அவார்டு கிடைத்துள்ளது. ஆனால் நம்மில் பல பேர் அந்த ஆவணப்படத்தை பார்த்த்து கூட இல்லை.

வரலாறுகளை நோக்கி செல்பவருக்கு தகுந்த அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்.




தன் சொந்த நாட்டிற்கு நன்றியோடு இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது நபிமொழி. அதன்படி நன்றியோடும் இருக்கிறோம். பொறுமையாடும் இருக்கிறோம். 15.08.17 அன்று அரசாங்க பள்ளிகள், அலுவலகங்கள் என்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்படும். அந்தக் கொடியை வடிவமைத்தவர் ஸுரய்யா தியாப்ஜி என்கிற ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதை மறந்துவிடாதீர்கள்.

No comments: